யாரும் பாதுகாப்பாக இல்லை... ஒரே தீர்வு அதுதான்: இன்னும் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும்
தொடர்ந்து உருமாற்றம் கண்டுவரும் கொரோனாவால் யாரும் பத்திரமாக இல்லை எனவும், ஒரே தீர்வு தடுப்பூசி அளிப்பதை துரிதப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த கொரோனா தொற்றால், உலகில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது உறுதியானதாக நிபுணர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மொத்த மக்களுக்கும் தடுப்பூசி அளிப்பதே இதற்கான தீர்வு என குறிப்பிட்டுள்ள 50 அமைப்புகள் சேர்ந்த ஒரு குழு, கொரோனாவால் ஆபத்து இன்னும் நீங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தற்போதைய மதிப்பீடுகளின் கீழ், பல வளரும் நாடுகள் 2024 வரை தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான அளவு தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்காது என்றே அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
மட்டுமின்றி, புதிதாக ஒரு திடீர் அலை அல்லது உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த தொற்றால், தடுப்பூசி எடுத்துக்கொண்ட நாட்டு மக்களுக்கும் ஆபத்து உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காரணம் உலகின் மொத்த நாடுகளும் ஒன்றுடன் ஒருவகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பேரலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போது, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவருவது மிக ஆபத்தான விடயம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் மொத்தம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரையில் உலகில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல நாடுகளில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கை மீறியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 20 லட்சம் பேர் இலக்காகியுள்ளனர்.
மட்டுமின்றி 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அந்த நாட்டு அரசு வெறும் 11 கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு மட்டுமே இதுவரை ஒப்பந்தம் அளித்துள்ளது.
பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நரேந்திர மோடி அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஏழை நாடுகளில் 10 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.