மியான்மரை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
தென்கிழக்கு ஆசியாவில் இன்று ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டதுடன் 732 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை
இன்று பிற்பகல், மியான்மரை ஆளும் இராணுவ ஆட்சிக்குழு, நிலநடுக்கத்தை அடுத்து முதற்கட்ட பலி எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. தாய்லாந்து முன்னதாகவே இறப்பு எண்ணிக்கையை வழங்கியிருந்தாலும் உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்படுவதாக மியான்மர் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி குடியிருப்புகள் பல சரிந்து விழுந்துள்ளதாகவும், சாலைகள் சின்னாபின்னமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணியளவில் மியான்மரை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால், 10,000 முதல் 100,000 பேர்கள் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று நிலநடுக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பல மடங்கு அதிகரிக்க
மியான்மரின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டுள்ளது. பாங்காக்கில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன, மியான்மர் தலைநகர் நய்பிடாவில் சாலைகள் சின்னாபின்னமாகியுள்ளது.
மியான்மரில் உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்ட நிலையில், ஆளும் இராணுவ ஆட்சிக்குழு அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறியது.
ஆசியாவிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மியான்மர் , மிக மோசமான உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மிக மோசமான நிலநடுக்கம், அந்த நாட்டையே மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |