மியான்மர் நிலநடுக்கம்... ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
மியான்மரில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தை அடுத்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஹொட்டல் ஒன்றின் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
26 வயது நபர்
மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நூற்றாண்டிலேயே மிக மோசமான நிலநடுக்கமானது முழு சுற்றுப்புறங்களையும் தரைமட்டமாக்கியது, கோயில்கள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் என அனைத்தும் மொத்தமாக சேதமடைந்துள்ளது.
துருக்கி உட்பட பல்வேறு நாடுகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தலைநகர் Naypyidaw-வில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 26 வயது நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மியான்மர் மற்றும் துருக்கியின் மீட்புக் குழுவினர் நடத்திய சோதனையில் அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 3,000 கடந்துள்ளது.
இந்த நிலையில், மியான்மரில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக உதவிகளை அதிகரிக்குமாறு மனிதாபிமான அமைப்புகள் மற்ற நாடுகளை வலியுறுத்தியுள்ளன.
10,000 வரை இருக்கலாம்
தண்ணீர், உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையாக உள்ளது, மேலும் மே மாதத்தில் பருவமழை தொடங்கக்கூடும் என்றும் மனிதாபிமான அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மட்டுமின்றி, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது 53 மில்லியன் மக்களைக் கொண்ட வறிய நாட்டிற்கு கிடைத்துள்ள தொடர்ச்சியான அடிகளில் சமீபத்திய ஒன்று என்றே கூறுகின்றனர்.
இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,500 எனவும் மாயமானவர்கள் எண்ணிக்கை 441 என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானதாக கூறப்படும் எண்ணிக்கையில் பெரும்பாலும் இறந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, சில அமைப்புகள் தெரிவிக்கையில், உத்தியோகப்பூர்வமற்ற இறப்பு எண்ணிக்கை 10,000 வரை இருக்கலாம் என்றே குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |