'அது மட்டும் இப்போ முடியாது' அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மியான்மர் இராணுவம்!
ஆங் சான் சூகியை சந்தித்து பேசுவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு மியான்மர் இராணுவ அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் முறைகேடு விவகாரத்தில் அரசு தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரையும் கடந்த திங்கட்கிழமை மியான்மர் இராணுவம் சிறை பிடித்தது.
அதனைத் தொடர்ந்து, மியான்மரின் ஆட்சியை ஜெனரல் மின் ஆங் ஹேலிங் தலைமையான மியானமர் இராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.
இதனையடுத்து, உலகம் முழுவதும் மியான்மார் இராணுவத்தின் செயலுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்ததோடு, இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து மியான்மர் மீண்டும் ஜனநாயகத்துக்கு திரும்பவேண்டும் என வலியுறுத்திவருகிறது.
கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை ஆங் சான் சூகியை வெளியுலகத்துக்கு காட்டப்படவில்லை என்ற நிலையில், அவரை நேரில் பார்த்து பேச அமெரிக்க அரசாங்கம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தது.
ஆனால், மியான்மரில் மக்கள் புரட்சி அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என மியான்மர் இராணுவ அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய அமெரிக்க வெளியறவுத் துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் "நாங்கள் பர்மா மக்களுடன் நிற்கிறோம், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஆதரவாக அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது உட்பட, அமைதியாக போராட்டங்களில் ஈடுபடும் அவர்களின் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.
மேலும், "ஆங் சான் சூகியை அணுக நாங்கள் முறையாக மற்றும் முறைசாரா வகையிலயிலும் முயற்சியை மேற்கொண்டோம், ஆனால் அந்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டன" என்றார்.
இதற்கிடையில், பல உலகத் தலைவர்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தயுள்ள நிலையில், மியான்மர் நெருக்கடி குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு அமர்வு நடத்தப்போவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.