மியான்மரில் இரட்டை படகு விபத்து: 500-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம்- ஐ.நா. அச்சம்
மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.
இந்த படகுகள் ஜூன் மாத இறுதியில் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டதாகவும், பெரும்பாலும் ரோஹிங்கியா மக்கள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
முதல் படகில் சுமார் 250 பேர் இருந்தனர். புறப்பட்ட சில நேரங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டாவது படகில் 280 பேர் இருந்ததாகவும், ஜூலை 8-ஆம் தேதி அயேயார்வாடி கடற்கரையில் மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹிங்கியா மக்கள் பல தசாப்தங்களாக மியான்மர் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். 2017-இல் வன்முறையிலிருந்து தப்பி சுமார் ஒரு மில்லியன் பேர் வங்காளதேசம் நாட்டின் காக்ஸ் பஜார் முகாமில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு தற்போது நிதி குறைவால் வாழ்வாதாரம் கடினமாகி, பலர் ஆபத்தான கடல் பயணத்தைத் தேர்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.
சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் பயணம் இன்னும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
ஐ.நா. அமைப்புகள், “இது உலகின் மிக ஆபத்தான கடல் பாதைகளில் ஒன்றாகும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தஞ்சம் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |