பிரான்சில் பல இடங்களில் இன்டர்நெட் கேபிள்களை துண்டித்த மர்ம நபர்கள்: நாடு முழுவதும் கடும் பாதிப்பு
பிரான்சில் புதன்கிழமையன்று மர்ம நபர்கள் இன்டர்நெட் கேபிள்களைத் துண்டித்ததைத் தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் இணையசேவையும் தொலைபேசி சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
புதனன்று மாலை பல இடங்களில் சேவை வழங்கல் மீண்டும் துவங்கினாலும், வழக்கத்தை விட இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
யாரோ வேண்டுமென்றே இன்டர்நெட் ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைத் துண்டித்துள்ளதாகவும் அதனால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இணைய சேவை வழங்குவோர் தெரிவித்துள்ளார்கள்.
புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் இணையசேவை பாதிக்கப்பட்டது. மதியம் 12.00 மணிக்கு முன் ட்விட்டரில் அது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதைச் செய்தது யார் என்பது இதுவரையில் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக இணைய சேவை வழங்குவோர் புகாரளித்துள்ள நிலையில், குற்றவியல் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.