அவைகளை தொடாதீர்கள்... சுவிஸ் மாகாணம் ஒன்றில் ஆங்காங்கு காணப்படும் மர்ம பெட்டிகள்
சுவிஸ் மாகாணமான ஜெனீவாவில் ஆங்காங்கு சில ஆரஞ்சு நிற பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் குழப்பமடைந்த மக்கள், அவற்றை எடுத்துப் பார்த்துவிட்டு வேறிடத்தில் வைத்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.
தயவு செய்து அவற்றை அப்படியே விட்டுவிடுங்கள், அவற்றைத் தொடாதீர்கள் என அதிகாரிகள் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அந்த பெட்டிகள், புவி வெப்ப ஆற்றலை கண்டறியும் நோக்கில், நிலத்தில் காணப்படும் அதிர்வுகளை அளவிடும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.
மாகாணம் முழுவதும் 20,000 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.
அவற்றை அவர்கள் எடுத்துப் பார்த்துவிட்டு வேறிடத்தில் நகர்த்திவைத்து விட்டுச் சென்றுவிடுவதால், அவை சேகரிக்கும் தரவுகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
தற்போது அவற்றை மக்கள் அணுகாதவகையில் நகரின் மையப்பகுதிக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளார்கள் அதிகாரிகள்.
அத்துடன், அவற்றை யாராவது எடுக்கிறார்களா, இடம் மாற்றுகிறார்களா என்பதைப் பார்க்க ரோந்து செல்லும் பணியையும் அதிகாரிகள் துவக்கியுள்ளார்கள்.
மேலும், அவற்றில் GPS பொருத்தப்பட்டுள்ளதால் அவை எங்கிருக்கின்றன என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடமுடியும். எனவே, மக்கள் அவற்றை வீட்டுக்குக் கொண்டு சென்றுவிடவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.