ஓர் ஆண்டில் 642 மில்லியன் டொலர்கள்! இதற்காக மட்டும் செலவு செய்த வடகொரியா.. அதிர்ச்சி அறிக்கை
வடகொரியா கடந்த ஆண்டில் மட்டும் அணுஆயுத சோதனைகளுக்காக சுமார் 642 மில்லியன் டொலர்களை செலவு செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக அணுஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், ஆயுதம் தயாரிப்பதில் அந்நாடு முனைப்பு காட்டி வருகிறது.
தென் கொரியாவின் சமீபத்திய வெள்ளை அறிக்கையின்படி, வடகொரியாவிடம் 50 கிலோ புளுட்டோனியம், கணிசமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: AFP/Getty Images
இந்த நிலையில் அணுசக்தி எதிர்ப்பு ஆர்வலர்களின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு மட்டும் வடகொரியா அணுஆயுத சோதனைகளுக்காக சுமார் 642 மில்லியன் டொலர்களை செலவு செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், வடகொரியா மில்லியன் கணக்கில் தனது ராணுவத்திற்காக செலவழிப்பதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. ஆனால் வடகொரியாவோ, தற்காப்பிற்காக அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு தமக்கு இறையாண்மை உரிமை உள்ளதாகவும், சர்வதேச அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நாட்டைப் பாதுகாக்க அவை அவசியம் என்றும் கூறுகிறது.
Photo: KCNA/Reuters
உலகளாவிய அணு ஆயுத செலவு குறித்த அறிக்கை, கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்டது. அதில் வடகொரியா தனது மொத்த தேசிய வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கை தொடர்ந்து ராணுவத்திற்காக செலவு செய்வதாகவும், தனது ராணுவ பட்ஜெட்டில் சுமார் 6 சதவீதத்தை அணு ஆயுதங்களுக்கு என ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.