மாதவிடாய் என கெஞ்சியும் மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர்: வெளியான பரபரப்பு ஆடியோ
தமிழகத்தில் நர்சிங் கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாவட்டத் தலைவரின் நர்சிங் கல்லூரி
தமிழக மாவட்டம் நாகப்பட்டினத்தில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த நர்சிங் கல்லூரியில், நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் உடற்கூறியல் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.
உடற்கூறியல் சதீஷ் பாலியல் தொல்லை
சதீஷ் அங்கு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்தது தெரியவந்துள்ளது. மாணவிகளை அடிக்கடி மிரட்டி தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை கட்டாயப்படுத்தி உறவு கொள்வதையும் சதீஷ் வாடிக்கையாக கொண்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கல்லூரியில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என விதியுள்ளது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இதை மீறி ஆண் மாணவர்களிடம் பேசும் மாணவிகள்தான் சதீஷின் குறி, மாணவர்களுடன் பேசும் மாணவிகளை பார்த்துவிட்டால், அந்த மாணவிகளை ஒவ்வொருவராக அழைத்து உன்னை கண்டிக்க வேண்டும், நீ என் வீட்டுக்கு வா என ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியே வரசொல்வார் என கூறப்படுகிறது. அப்படி வீட்டிற்கு வரும் மாணவிகளிடம் கண்டிப்பது போல் பேசி தனது பாலியல் இச்சையையும் தீர்த்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது.
இவரால் நிறைய மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியே சொல்ல முடியாமல் மாணவிகள் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதிர வைக்கும் ஆடியோ
அவ்வாறு, அண்மையில் ஒரு மாணவியை சதீஷ் வீட்டுக்கு வருமாறு அழைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் சதீஷ், அந்த மாணவியிடம் உன் மீது ஒரு புகார் வந்திருக்கிறது. உன்னை விசாரிக்க வேண்டும். உடனே என் வீட்டுக்கு வா என்கிறார். அதற்கு அந்த மாணவி நான் காலேஜுக்கு வருகிறேன் என கூற, அதெல்லாம் முடியாது என சதீஷ் மிரட்டுகிறார்.
மாதவிடாய் என கெஞ்சும் மாணவி
அந்த மாணவி, சார் அதெல்லாம் வேண்டாம், என்னைவிட்டுவிடுங்கள் என கெஞ்சுகிறார்.
அப்படியும் விடாமல் நீ வீட்டுக்கு வந்துதான் ஆக வேண்டும் என அவர் மிரட்ட, என்ன செய்வது என தெரியாமல் அந்த மாணவி தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாகவும், தன்னால் வர முடியாது என கெஞ்சுகிறார்.
அதையும் பொருட்படுத்தாத சதீஷ், பரவாயில்லை நீ வா நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறுகிறார். மேலும் ஏன்டா, ஏன் பயப்படுறே என பாசமாக பேசுவது போல் அந்த மாணவியை தன வலையில் விழவைக்க முயற்சிக்கிறார்.
இந்த அதிர வைக்கும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
தற்போது, இந்த செல்போன் ஆடியோவை தனது பெற்றோர் மூலம் அந்த மாணவி மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய நிலையில் அவர்கள் கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமரச பேச்சுவார்த்தை
இதனிடையே, பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மாணவிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் மாணவிகள் அந்த ஆசிரியர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சதீஷ் மீதும் சமரசம் பேசும் கார்த்திகேயன் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.