8 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த நகவெட்டி! கோபத்தில் எடுத்த முடிவால் நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒருவரின் வயிற்றில் 8 ஆண்டுகளாக இருந்த நகவெட்டியை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
சத்தீஸ்கர் மாநிலம், சிராஜ்பூரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சில நாள்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது இவர், வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு, அவரை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது தான் அவரது வயிற்றில் நகவெட்டி இருப்பது தெரியவந்தது. பின்பு, லேப்ரோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் நகவெட்டியை வெளியே எடுத்தனர்.
நகவெட்டியை விழுங்கியது எப்படி?
இது குறித்து மருத்துவர்கள் விசாரித்த போது,"30 வயதாக இருக்கும் போது குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் பல வருடங்களாக மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்ததாகவும், அப்போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும்" அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "மறுவாழ்வு மையத்தில் உள்ள மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால் கோபத்தில் நகவெட்டியை விழுங்கிவிட்டேன். அப்போது, அதனை நான் அங்குள்ளவர்களிடம் தெரிவித்த போது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் காலையில் வெளிவந்துவிடும் என்று கூறினர். அதன் பிறகு, அப்போதே நகவெட்டி வெளிவந்திருக்கும் என்று தான் நான் நினைத்திருந்தேன்.
இப்போது, மருத்துவர்கள் கேட்கும் போது தான் அந்த விடயம் நினைவுக்கு வருகிறது. நான் என் மனைவியிடம் கூட இது பற்றி கூறியதில்லை" என்றார்.
இது குறித்து மருத்துவர் கூறும்போது,"என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். அவர் விமான நிலையத்திற்கோ அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்திருந்தால் இது தெரிய வந்திருக்கும்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |