முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு! நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சார்பில் விடுதலை கோரி தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை, மூன்று வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், சிறையில் இருந்து வரும் நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. தீர்மானம் குறித்து கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக கருதி, விடுதலை செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், தமிழக உள்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், முன்கூட்டி விடுதலை செய்ய அமைச்சவை பரிந்துரைத்தாலும், அதற்கான உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்பட வேண்டியதுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏழு பேரில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, டிசம்பர் 7ல் விசாரணைக்கு வருகிறது என்றார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பேரறிவாளன் கோரிய தகவல் மறுக்கப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் நகல் உள்ளதா என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, முன்கூட்டி விடுதலை கோரி, ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக, வழக்கறிஞர் சாமிதுரை தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இரு வழக்குகளின் விசாரணையும், மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு முதல் பெஞ்ச் அனுமதி வழங்கியது.