பிரெவிஸின் அரைசதம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்த நமீபியா
T20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு எதிராக தோல்வியே காணாத பெருமையை நமீபியா பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா வீழ்த்திய நமீபியா
தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு T20 தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற முதல் T20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா மோதியது. நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நமீபியா, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ஜன் ஃப்ரைலிங்க் 60 ஓட்டங்களும், லாரன் ஸ்டீன்காம்ப் 41 ஓட்டங்களும் குவித்தனர்.

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா ஆட தொடங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ப்ரேவிஸ் நிதானமாக ஆடி 75 ஓட்டங்கள் குவித்தார்.

இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா இதுவரை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2 T20 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெருமையை பெற்றுள்ளது.

கடைசி 2 டக் விக்கெட் உட்பட 4 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய நமீபியா வீரர் ஸ்மித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |