நான் உங்கள் ரசிகன் என சொன்ன விஜய் - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
மூத்த அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
மூத்த அரசியல்வாதியும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். திமுகவில் இருந்து வைகோ நீக்கபட்டப்போது, அவருடன் விலகி மதிமுகவில் பயணித்தார்.

அதன் பின்னர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவில் இருந்து விலகி, 2012 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைத்து கொண்டார்.
அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன் பிறகு, டிடிவி தினகரனின் அமமுகவில் பயணித்த அவர், பின்னர் மீண்டும் திமுக மேடைகளில் பேசி வந்தார்.
சமீபகாலமாக தவெக தலைவர் விஜய்யை ஆதரித்து பேசி வந்த அவர், இன்று விஜய்யை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், "எந்த திசைக்கு போக வேண்டும் என்பதை தெப்பம் தீர்மானிக்க முடியாது, தண்ணீர் தான் தீர்மானிக்கும்.
நானொரு தெப்பம். என்னுடைய திசையை தம்பி விஜய் தீர்மானித்திருக்கிறார். தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து `நீயும் முதல்வன் ஆகலாம்’ புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைந்தேன்.
விஜய் பாஜக உடன் நெருக்கமா?
தவெக தலைவர் விஜயை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப்போல் பூரிக்கிறேன். விஜய் என்னை கண்டதும் நான் உங்கள் ரசிகன் என கூறினார். நான் மெய்சிலிர்த்து போனேன்.

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், அறிவாலயத்திலிருந்து வசைமாரி பொழிந்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். என் மனம் உடைந்து போனது.
எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடம் சென்று நின்றது இல்லை. அப்படியே கேட்டாலும் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது. ஆனால், என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை மிரட்டுகிறார்கள்.

விஜய்யிடம் நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டேன். அதற்கு , "இங்கே தேர்தல் நடக்க உள்ளதால், ஆட்சியில் உள்ளவர்களை வலுவாக எதிர்க்க வேண்டும். தேவை வரும்போது அவர்களையும் வலுவாக எதிர்ப்போம்" என்றார் விஜய்.
திருப்பரங்குன்றம் சம்பவத்தை வைத்து குன்றம் எங்களுக்கு, குமரன் எங்களுக்கு என சொல்பவர்கள், ஒரு கலவர அரசியலுக்கு கை கால் முளைக்க வைக்கமுடியுமா என யோசிக்கிறார்கள். இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது " என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |