வெள்ளை மாளிகையில் வெகு விமர்சையாக நடந்த ஜோ பைடன் பேத்தியின் திருமணம்!
அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி திருமணம் இன்று நடந்தது.
நான்கு ஆண்டு காதல்
ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடனும், பீட்டர் நீல் என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நவோமி - நீல் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது.
@AP
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவரின் பேத்தி திருமணம் வெள்ளை மாளிகையில் நடந்துள்ளது.
தெற்கு புல்வெளியில் திருமணம்
இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நவோமி பைடன் மற்றும் பீட்டர் நீலின் திருமணம் நடந்தது. திருமண நிகழ்வின்போது மணமகள் நவோமி, நீண்ட வெள்ளை கவுன் அணிந்திருந்தார். சுமார் 200 விருந்தினர்கள் தம்பதியை சூழ்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஜோடியைச் சுற்றி அரை வட்டத்தில் நாற்காலிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. எனினும் வெளிப்புற அரங்கில் கூடாரம் போடவில்லை. வெள்ளை மாளிகை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாளிகையின் இருபுறமும் உள்ள இரண்டு பொதுப் பூங்காக்கள் மூடப்பட்டன.
திருமண விருந்துக்கு பின்னர், இன்று இரவு புதுமணத் தம்பதி வெள்ளை மாளிகையில் இனிப்பு மற்றும் நடனத்துடன் கொண்டாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், ' நவோமி பைடன் - பீட்டர் நீல் திருமணம் ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்வு. அவர்கள் இருவரும் திருமணத்தை ஊடகங்களுக்கு மூடிவிடுமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறோம். இது தம்பதி எடுத்த முடிவு' என தெரிவித்தார்.
பைடன் குடும்பத்திற்கு இது ஒரு பண்டிகை வார இறுதி ஆகும். ஏனெனில், நாளைய தினம் ஜோ பைடன் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.