அண்டார்டிகா பனிப் பாறைகளுக்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி: நாசா செயற்கைக்கோள் அளித்த தகவல்
மேற்கு அண்டார்டிகாவில் பனிப்பாறைக்கு அடியில் பிரம்மாண்ட நதி பாய்வதை நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுள்ளது.
அண்டார்டிகா பனிப் பாறைகளுக்கு அடியில் பாயும் பிரம்மாண்ட நதி
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளில், அண்டார்டிகாவின் உறைபனி மற்றும் பனிப்பாறைகளுக்கு அடியில் சுறுசுறுப்பான நீரோட்ட அமைப்பும், பிரம்மாண்ட ஏரிகளும் இயங்கி வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
நாசா அமைப்பினால் விண்ணில் செலுத்தப்பட்ட ஜஸ்சாட் செயற்கைக்கோள் கடந்த 2003 முதல் 2006 வரை அண்டார்டிகாவின் மேற்பரப்பை தீவிரமாக ஆராய்ச்சி செய்து வந்தது.
இதில் பொருத்தப்பட்டிருந்த லேசர் கருவிகள் பனிப்பாறைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட துல்லியமாக கணக்கிடும்.

இந்த ஆய்வின் முடிவில், மேற்கு அண்டார்டிகாவின் பனிப்பரப்பிற்கு அடியில் தொடர்ச்சியாக நீர் நகரும் 14 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் விலான்ஸ் மற்றும் மெர்சர் பனி நதிகளின் மேற்பரப்பில் பெரிய பள்ளங்களை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர்.
அத்துடன் 2003 முதல் 2005 வரையிலான குறுகிய காலகட்டத்தில் இந்த பகுதியில் 9 மீட்டர் வரை பனிப்பரப்பு கீழே சரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் “ஏங்கல்பார்ட்” என்ற மறைமுக ஏரியில் இருந்து கிட்டத்தட்ட 2 கன கிலோமீட்டர் அளவிலான நன்னீர் பெருங்கடலில் கலந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள புவி வெப்பம் மற்றும் உராய்வு காரணமாக நீர் உறைந்து போகாமல் தொடர்ந்து திரவ நீராக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |