தோனியைப் போல் சாதித்தவர் நடராஜன்! மைதானத்தை திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்
தமிழக மாவட்டம் சேலத்தில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த தினேஷ் கார்த்திக், அவரை தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டி பேசினார்.
நடராஜன் கட்டிய மைதானம்
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன், ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மிரட்டி வருகிறார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவ உள்ளதாக நடராஜன் முன்னர் அறிவித்திருந்தார்.
அதன் திறப்பு விழா இன்று நடந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி
அதன் பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய தினேஷ் கார்த்திக், 'நடராஜன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். அவரின் கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்று. பலரும் முன்னேறிய பின்னர் உதவியவர்களை மறந்துவிடுவார்கள் . ஆனால் நடராஜன் அவரின் பயிற்சியாளரும், வழிகாட்டியுமான ஜேபி அவர்களுடன் இன்றும் நின்று கொண்டிருக்கிறார். பெரிய நகரங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சின்ன ஊரில் இருந்து வந்து சாதித்தவர் தான் எம்.எஸ்.தோனி. அதேபோல் சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து இந்திய கிரிக்கெட்டில் சாதித்தவர் நடராஜன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'ஐபிஎல் தொடருக்கு பின் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று ஹெய்டனும், ரிக்கி பாண்டிங்கும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அதுதான் நடராஜன் அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஏராளமானோர் விளையாடி இருக்கிறார்கள்.
நானும் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால், எனக்கு இப்படியொரு மைதானம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை.
என்னுடன் இருக்கும் மக்கள் என்னை விட மிகப்பெரிய வீரர்களாக வர வேண்டும் என்ற ஆசையுடன் நடராஜன் மைதானத்தை கட்டியுள்ளார். அவர் தான் பெற்றதை இந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன் சாட்சி தான் இந்த மைதானம்' என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடராஜன் கட்டியுள்ள இந்த மைதானத்தில் 4 Pitch, இரண்டு பயிற்சி தடங்கள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |