ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை... உக்ரைனுக்கு உதவ தீவிரமாகக் களமிறங்கிய நேட்டோ
ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைக் கூட உக்ரைனால் சுட்டு வீழ்த்த முடியாததை அடுத்து, பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் விநியோகத்தை அதிகரிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா தீவிரம்
புதன்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய ஏவுகணை எதையும் சுட்டு வீழ்த்த உக்ரைன் தரப்பு தவறிய நிலையில், உக்ரைனுக்கு அவசரமாகத் தேவைப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றுத் தருவதற்கான பணிகளில் நேட்டோ (NATO) ஈடுபட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குளிர்காலத்திற்கு முன்னதாக ஏவுகணை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாக ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் மார்க் ரூட்டைச் சந்தித்த பிறகு ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில், அலுவலக ரீதியான தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, அவசியமான அரசியல் முடிவுகளை எடுப்பது முக்கியம்.
சொல்லப்போனால், உக்ரைனில் உள்ள மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நமது கூட்டாளிகளின் உறுதியான மனப்பான்மையையே சார்ந்திருக்கின்றன என்றார்.
புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா 24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதில், குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா இரவு முழுவதும் ஏவிய 115 ட்ரோன்களில் 98-ஐத் தங்கள் தற்காப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதையும் வீழ்த்த முடியவில்லை என்றும் உக்ரேனிய விமானப்படையின் ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில், உக்ரைனின் நட்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் விநியோகம் 2025-ஆம் ஆண்டின் அளவில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டதாக புதன்கிழமையன்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும், உக்ரைனின் எரிசக்தித் துறைக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

மட்டுமின்றி, இடைமறிக்கும் ஏவுகணைகளின் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் மத்திய கிழக்கில் நடைபெறும் போர் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
பேட்ரியாட் ஏவுகணை
உக்ரைனிய விமானப்படையின் தகவலின் அடிப்படையில், ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம், எஸ்-400 மற்றும் சிர்கான் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்ட ஒரே அமைப்பு, உக்ரைனியப் படையில் உள்ள பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மட்டுமே.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் பெருமளவிலான பேட்ரியாட் மற்றும் பிற இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் முன்னெடுத்த ஒரு பகுப்பாய்வின்படி, போருக்கு முன்பிருந்ததை விட அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை இருப்பு குறைந்தது 65 சதவீதம் சரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆயுதப் பற்றாக்குறை என்பதே இல்லை என பென்டகன் கூறுகிறது. இதனிடையே, ஐரோப்பாவின் முதல் பேட்ரியாட் ஏவுகணை உற்பத்தி நிலையம் ஜேர்மனியில் செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், உக்ரைன் 'பேட்ரியாட்' ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தை அமெரிக்கா வழங்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அது குறித்து தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். உரிமம் பெற்றிருந்தாலும், உக்ரைனில் உற்பத்தியைத் தொடங்க பல ஆண்டுகள் ஆகும் என்றே அதிகாரிகளும் நிபுணர்களும் மதிப்பிடுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |