புடின் எடுத்த திடீர் முடிவு... போர் ஆயத்தங்களை முன்னெடுக்கும் நேட்டோ நாடுகள்
தங்களின் அணு ஆயுத நெறிமுறைகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதுப்பித்த நிலையில், நேட்டோ நாடுகள் அனைத்தும் போர் ஆயத்தங்களை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி, கிரேக்கம், அமெரிக்கா
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை நாட்டின் அணு ஆயுதக் கோட்பாட்டில் மாற்றங்களை அங்கீகரிக்கும் புதிய ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.
ஏதேனும் எதிரி நாடொன்று வழக்கமான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால், பதிலுக்கு உக்கிரமாக திருப்பியடிக்கும் அனுமதியை இந்த புதுப்பிக்கப்பட்ட ஆணை வழங்குகிறது.
விளாடிமிர் புடினின் இந்த திடீர் முடிவு உலக நாடுகளின் தலைவர்களை போர் பயத்தில் தள்ளியுள்ளது. இத்தாலி, கிரேக்கம், அமெரிக்கா உட்பட பல நாடுகள் இதனிடையே உக்ரைனில் தங்களின் தூதரகங்களை மூடவும், அதிகாரிகளை திரும்பப்பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் சில நாடுகள் போருக்கான ஆயத்தங்களை முன்னெடுக்கவும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கடந்த 1000 நாட்களாக போர் நடந்து வருவதால், மக்கள் ஏற்கனவே தயார் நிலையிலேயே உள்ளனர்.
ஜேர்மன் அரசாங்கம் தங்கள் குடிமக்களை போருக்கான ஆயத்தங்களை முன்னெடுக்க கோரியுள்ளது. ரஷ்யா இராணுவ ரீதியான தாக்குதல் மட்டுமின்றி, சமூக ரீதியான தாக்குதலையும் முன்னெடுக்கும் ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் Boris Pistorius எச்சரித்துள்ளார்.
ஒருபோதும் அச்சுறுத்த முடியாது
இந்த நிலையில், ஜேர்மனியை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இருப்பினும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், நேட்டோ நாடுகளுக்கான ஒருங்கிணைக்கும் மையமாக ஜேர்மனி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்வீடன் ஏற்கனவே மில்லியன் கணக்கான துண்டு பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் மக்களை எச்சரிக்கை செய்துள்ளது. மட்டுமின்றி உணவு மற்றும் குடிநீரை சேமிக்கத் தொடங்கவும் வலியுறுத்தியுள்ளது.
பின்லாந்தும் தங்கள் மக்களை போர் தொடர்பில் எச்சரித்துள்ளது. மட்டுமின்றி உள்கட்டமைப்புகளை பாதுகாக்க நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
போர் சூழல் உருவாகும் எனில், ஒரு வாரத்திற்கு சமாளிக்கத் தேவையான அனைத்தையும் சேமிக்க நோர்வே தமது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |