போலந்து நாட்டுக்குள் அத்துமீறிய ரஷ்ய ட்ரோன்கள்: நேட்டோ ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவை செயல்படுத்த கோரிக்கை
போலந்து நாட்டுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து நேட்டோ ஒப்பந்தத்தின் நான்காவது பிரிவை செயல்படுத்த அந்நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
போலந்து நாட்டுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள்
உள்ளூர் நேரப்படி, நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை 12.50 மணிக்கு, முதல் ரஷ்ய ட்ரோன் போலந்துக்குள் நுழைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அவை ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளர் நாடான பெலாரஸ் நாட்டிலிருந்து ஏவப்பட்டுள்ளன.
போலந்து நாட்டின் பிரதமரான டொனால்ட் டஸ்க் (Donald Tusk), நேற்று நள்ளிரவில் 19 முறை ரஷ்ய ட்ரோன்கள் போலந்துக்குள் ஊடுருவியதாகவும், அவற்றில் நான்கு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, நேட்டோ ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவை செயல்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவு என்ன கூறுகிறது?
நேட்டோ ஒப்பந்தம் அல்லது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவு, பொதுவாக முக்கிய நேட்டோ நடவடிக்கைகளுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுகிறது.
நேட்டோ ஒப்பந்தத்தின் 4ஆவது பிரிவு, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம்பும் போதெல்லாம் ஒன்று கூடி ஆலோசனை செய்ய அனுமதிக்கிறது.
என்றாலும், அது நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவைப்போல, பதிலடி கொடுப்பதை அனுமதிப்பதில்லை.
நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு, நேட்டோ அமைப்பின் ஒரு உறுப்பினருக்கு எதிரான ஆயுதமேந்திய தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படுவதாகவும், ஆகவே, தாக்கப்பட்ட அந்த நாட்டின் பாதுகாப்பை மீட்டெடுப்பதிலும் பராமரிப்பதிலும் நேட்டோ அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |