உக்ரைனுக்கு உதவினால்... மீண்டும் மிரட்டல் விடுத்த ரஷ்யா
நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பினால், கட்டாயம் அவை அழிக்கப்படும் என ரஷ்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து உக்ரேனிய நிலைகள் மீது இரண்டு கலிப்ர் ஏவுகணைகளை ஏவியதாக ரஷ்யா தெரிவித்ததை அடுத்தே, நேட்டோ தொடர்பில் மீண்டும் ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறித்த சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தெரிவிக்கையில் மேற்கத்திய நாடுகளில் இருந்து உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை ரஷ்யா அழிக்க முற்படும், அவை சமீபத்திய வாரங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பிறகு, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வருகிறது. மட்டுமின்றி, ரஷ்யாவின் கொடூர நடவடிக்கைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
தற்போது உக்ரைன் வெற்றியை தடுக்கும் நோக்கில், அதன் ஆயுத பலத்தை கட்டுப்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. இதன் ஒருபகுதியாக உக்ரைனில் 6 ரயில் நிலையங்களை முடக்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.