செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள்
செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான திட்டங்களை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
43 நாடுகளின்...
பாப் அல்-மண்டேப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக முன்னெடுக்கப்படும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதிக்கு எதிரான தங்களது கடற்படை முற்றுகையைத் தொடர்வதாலும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும்,
உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டொலர் என்ற அளவை எட்டியுள்ள நிலையில் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்தான், ஏமன், வங்கதேசம், நைஜீரியா, சூடான், ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய 14 நாடுகள் இதில் கையெழுத்திட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டணியின் வரைவு சாசனத்தை ஆய்வு செய்வதற்காக ரியாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 43 நாடுகளின் ராணுவத் தலைமை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஆகியோர் நேரில் அல்லது காணொளி வாயிலாகப் பங்கேற்றுள்ளனர்.
சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சவுதி அரேபியா இக்கூட்டணியின் நிறுவன நாடாகச் செயல்படுவதோடு, அதன் தலைமையகத்தையும் தனது நாட்டில் அமைக்கும். கூட்டத்தைத் தொடர்ந்து, அந்த 14 நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன.
கூட்டணியை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அந்த அறிக்கை வரவேற்றதோடு, கூடுதல் நாடுகள் முறையாக இணைவதற்கு முன்பு உள்நாட்டு நடைமுறைகளை இன்னும் முடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் மூன்று நீர்வழிகள் வழியாக, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதோடு, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் காப்பதற்கான தங்கள் நோக்கத்தையும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் பங்கு
மேலும், ஈரானை மையமாகக் கொண்ட மோதலுக்கு மத்தியில் ஒத்த பாதுகாப்பு நோக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஓமன் ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவின் இந்த கூட்டமைப்பில் இணையவில்லை.
ஆனால், இந்தப் புதிய கூட்டமைப்பில் அமெரிக்காவின் பங்கு அல்லது, அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் கலந்துகொண்டார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு அதிகாரிகள் குழு இந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல வளைகுடா நாடுகளை அதிருப்திகொள்ள வைத்துள்ளதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, ட்ரம்ப் காரணமாகவே வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டதுடன், தற்போது இஸ்ரேல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |