உயிருக்கு ஆபத்து... மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நவல்னி
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 180 கிலோமீற்றர் தொலைவில் விளாடிமிரில் உள்ள கைதிகளுக்கான சுகாதார மையத்திற்கு நவல்னி அழைத்துச் செல்லப்படுவார் என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் உணவருந்த அவர் ஒப்புக்கொண்ட நிலையில், அவரது உடல் நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவரின் சிகிச்சை பெற சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, நவல்னி கடந்த 3 வாரங்களாக சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் 44 வயதான நவல்னியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இறக்க வாய்ப்பிருப்பதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் தமது சமூக ஊடக பக்கத்தில் தகவல் வெளியிட்ட நிலையில்,
சிறையில் இருக்கும் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அரசு பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று உலக நாடுகள் எச்சரித்திருந்தன.
இதையடுத்து, நவல்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.