மூன்று வாரத்தில் 1600 நிலநடுக்கங்கள்... டசின் கணக்கான மக்கள் வெளியேற்றம்
தெற்கு ஜப்பானில் உள்ள தீவுகளில் சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் டசின் கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தூக்கத்தை இழந்த பலர்
கடுமையாக பாதிக்கப்பட்ட அகுசேகி தீவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகும், பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஜூன் 21 முதல் கிட்டத்தட்ட இடைவிடாத அதிர்வுகள் அந்தப் பகுதி மக்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களில் பலர் தூக்கத்தை இழந்துள்ளனர்.
அகுசேகி தீவில் வசிக்கும் 89 பேர்களில், 44 பேர் ஞாயிற்றுக்கிழமைக்குள் பிராந்திய மையமான ககோஷிமாவிற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 15 பேர்கள் அருகிலுள்ள மற்றொரு தீவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மக்கள் வசிக்கும் 7 தீவுகளையும் மக்கள் வசிக்காத 5 தீவுகளையும் உள்ளடக்கிய இந்த நகராட்சி, ககோஷிமாவிலிருந்து ஒரு படகு பயணத்தில் சுமார் 11 மணிநேரம் தொலைவில் உள்ளது. ஜூன் 21 முதல், திங்கட்கிழமை அதிகாலை வரை இப்பகுதியில் 1,582 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுனாமி ஏற்பட வாய்ப்பு
நீருக்கடியில் எரிமலை வெடிப்பும், மாக்மாவின் ஓட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர். இந்த நிலநடுக்கம் எவ்வளவு காலம் தொடரும் என்று அவர்களால் கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், செப்டம்பர் 2023 இல் இதேபோன்ற கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டது, அப்போது 346 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று. சுமார் 125 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்தத் தீவுக்கூட்டம், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை உணர்கிறது.
மட்டுமின்றி உலகின் நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதம் ஜப்பான் தீவுக்கூட்டங்களில் ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற அச்சங்கள் காரணமாக, சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்ட ஒரு மங்கா காமிக் புத்தகம், ஜூலை 5, 2025 அன்று ஒரு பெரிய பேரழிவு ஏற்படப்போவதாக முன்னறிவித்தது, உண்மையில் அப்படியான சம்பவம் ஏதும் நடக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |