இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்போ அவசியம் இந்த உடற்பயிற்சிகளை செய்து வாருங்க!

Kishanthini
in உடற்பயிற்சிReport this article
உடல் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதனை எளிய முறையில் பெற யோகாசனங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
சிறந்த யோகா பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்யும்போது, அனைத்து பகுதிகளுக்கும் தேவையான ரத்தம் சீராக கிடைக்கும். அந்தவகையில் ரத்த ஓட்டத்தை சீராக செலுத்துவதற்கு உதவும் 4 யோகாசனங்களை இப்போது பார்க்கலாம்.
சாவித்திரியாசனா
அனைத்து வயதினரும் செய்யக்கூடிய எளிமையான யோகா பயிற்சிகளுள் சாவித்திரியாசனாவும் ஒன்று. காற்றோட்டமான இடத்தில் துணி அல்லது போர்வை ஒன்றை விரித்துக்கொள்ளுங்கள்.
முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு, கையை மேல் நோக்கி உயர்த்திக்கொள்ளுங்கள். கை, முதுகு தண்டுவடம், இடுப்பு, தொடை அனைத்து ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பின்னர் மூச்சை மெதுவாக இழுத்து, வெளியே விடுங்கள். கவனம் முழுவதும் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுவதில் இருக்க வேண்டும்.
பாதாங்குஷ்டாஷ்சணம்
முதலில் தரை விரிப்பின் மேல் அமர்ந்து கொள்ளுங்கள். முன் பக்கமாக கால்களை நீட்டி, அதனை மேலே உயர்த்துங்கள். உங்கள் கைகளால் கால்களின் கட்டை விரல்களை பிடிக்க வேண்டும். கால்கள் மற்றும் கைகள் இந்த நிலையில் மடங்கியிருக்கக்கூடாது.
தற்போது V நிலையில் உடல் இருக்கும். தலை, மார்பு, இருதயம், வயிறு, இடுப்பு, தொடைகள், முதுகு, முழங்கால்கள் ஆகிய உறுப்புகள் இந்த ஆசனத்தில் நன்மை அடைகின்றன.
வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல், தலைவலி, பசியின்மை நீங்கும். மூளை, பிட்யூட்டரி மற்றும் தைராய்டு, சுரப்பிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். பாதாங்குஷ்டாஷ்சணம் பயிற்சியை நின்று கொண்டும் செய்யலாம்.
வஸிஷ்டாசனம்
சந்தோலாஷ்ணன் நிலையில் உங்கள் உடற்பயிற்சியை தொடங்க வேண்டும். ஒரு பக்கமாக இடது கையை நிலத்தில் ஊன்றி இருக்க வேண்டும். இடது கால் மட்டும் நிலத்தில் பட வேண்டும். வலது காலானது இடது கால் மேல் இருக்க வேண்டும். வலது கை மேல் நோக்கி உயர்த்தி இருப்பீர்கள்.
உடலானது ஒரு பக்கமாக நேராக இருக்க வேண்டும். உடலின் முழு எடையும் இடது கை மற்றும் இடது கால் பாதம் மட்டுமே தாங்கியிருக்கும். மேல் நோக்கி இருக்கும் வலது கையின் விரல்களை முகம் பார்க்க வேண்டும். இதேநிலையை வலது பக்கத்தில் பயிற்சி செய்ய வேண்டும்.
பார்ஸ்வ கோனாசனா
உங்கள் கால்களை விரித்து, உங்கள் வலது பாதத்தை வலது பக்கமாக திருப்ப வேண்டும். பின்னர், வலது முழங்காலை வளைத்து இடது காலை நேராக வைக்கவும். உங்கள் கைகளை பக்கவாட்டாக நீட்டவும்.
உங்கள் வலது உள்ளங்கையை கொண்டு வந்து உங்கள் வலது பாதத்தின் முன் வைக்கவும். இடது கையை மேல்நோக்கி நீட்டி, அதன் உள்ளங் கையை பார்க்க வேண்டும். வலது புறமாக செய்த பிறகு, இதே பயிற்சியை இடது புறமாக மேற்கொள்ள வேண்டும்.