T20 கிரிக்கெட்டில் எந்த அணியும் செய்யாத சாதனையை நேபாளம்
T20 கிரிக்கெட்டில் எந்த அணியும் செய்யாத சாதனையை நேபாள அணி படைத்துள்ளது.
2026 ஆசிய கிண்ண தகுதி சுற்று
2026 ஆசிய கிண்ணம் வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் திகதி வரை ஜப்பானில் நடைபெற உள்ளது.
இதில், கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் இடம் பெற உள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகள்ஐசிசி முழுநேர உறுப்பினர் என்ற அடிப்படையிலும், தொடரை நடத்தும் என்ற நாடு அடிப்படையில் ஜப்பானும் தகுதி பெற்றுள்ளது.

மீதி உள்ள 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற முதல் போட்டியில், சீனா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற சீனா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய நேபாளம் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குஷால் புர்டெல், 43 பந்துகளில் 5 பவுண்டரி, 16 சிக்ஸர்கள் உட்பட 129 ஓட்டங்கள் குவித்தார்.
314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சீனா, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.
நேபாளம் சாதனை
இதன் மூலம், நேபாள அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், இதன் மூலம் T20 போட்டிகளில் 2 முறை 300க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே அணி என்ற பெருமையை நேபாளம் பெற்றுள்ளது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டில் மங்கோலியாவிற்கு எதிரான போட்டியில், நேபாள அணி 314 ஓட்டங்கள் குவித்தது.
ஜிம்பாப்பே(344), ஜேர்மனி(308), இங்கிலாந்து(304) ஆகிய அணிகளும் 300க்கும் மேல் ஓட்டங்கள் குவிந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |