நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக சுஷிலா கார்க்கி பதவியேற்பு
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவியேற்றுள்ளார்.
பிரதமர் கார்க்கி
நேபாளத்தின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழா, இதுவரையான ஊகங்களுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, பொதுத் தேர்தல்கள் மார்ச் 5, 2026 அன்று நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேல் மற்றும் பிரதமர் கார்க்கி தவிர, துணை ஜனாதிபதி ராம் சகாய் யாதவ் மற்றும் தலைமை நீதிபதி பிரகாஷ் மான் சிங் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ராம் சந்திர பவுடெல், நேபாள ராணுவத் தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் Gen Z போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையேயான ஒருமித்த கருத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகத்தால் முறையாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
ஊழல் மற்றும் வேலையின்மையால் விரக்தியடைந்த இளம் தலைமுறை நேபாள மக்களால் முன்னெடுக்கப்பட்ட பல நாட்கள் நீடித்த போராட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வெடித்த வன்முறை சம்பவங்களால், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 51 என்றே கூறப்படுகிறது. அத்துடன் பிரதமர் ஒலி பதவி விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.
Gen Z போராட்டக்காரர்களின் ஒருமித்த வேட்பாளராக கார்க்கியின் பெயர் பல நாட்களாகப் பரவி வந்தாலும், அவர் மட்டும் பரிசீலிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்களில் சிலர் நேபாளத்தின் மின் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவந்த பொறியாளரான குல்மான் கிசிங்கிற்கு ஆதரவாக திரண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழலுக்கு எதிராக
இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு முடிவில் சுஷிலா கார்க்கியின் பெயர் இறுதி செய்யப்பட்டது. 2016 மற்றும் 2017 க்கு இடையில் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பணியாற்றிய கார்க்கி, பல இளம் நேபாள மக்களால் சமரசமற்ற நபராகக் கருதப்படுகிறார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில், ஊழலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததற்காக நற்பெயரைப் பெற்றார். இருப்பினும் அவருக்கு எதிராக அப்போது அரசாங்கத்தால் ஒரு பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பொதுமக்களின் அழுத்தம் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது, ஆனால் அரசாங்கத்தின் அந்த முயற்சி கார்க்கியை ஏமாற்றமடையச் செய்தது, இறுதியில் அவர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |