இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அண்டை நாடு - தீர்வுக்கு பிரித்தானியாவிடம் முறையீடு
இந்திய பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ள நேபாளம்
இந்தியா அதன் அண்டை நாடான நேபாளத்துடன் சுமார் 1,751 கிமீ எல்லையை பகிர்ந்து வருகிறது.
இந்தியாவுடன் எல்லை பிரச்சினை உள்ள சூழலில் நேபாள பிரதமர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நேபாள பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா, நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய போது, நேபாளமும் இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இந்தியா நேபாளத்தின் நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், நேபாளமும் இந்தியாவின் நிலத்தை பல இடங்களில் ஆக்கிரமித்துள்ளது என்பதை நான் அறிந்துகொண்டேன்.
வரலாற்றாசிரியர்கள், நில அளவையாளர்கள் மற்றும் அப்பகுதி குறித்து நன்கு அறிந்த வல்லுநர்களைக் கொண்ட குழுக்களை இரு அரசாங்கங்களும் அமைத்து, பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வைத் தேட வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து சீனா மற்றும் பிரித்தானியாவின் ஆலோசனைகளை நாடியுள்ளோம். பிரித்தானியா இந்தியாவிலிருந்து வெளியேறியது முதல் இந்த எல்லை பிரச்சினை உள்ளதால் இதில், பிரித்தானியா தலையிட வேண்டும் என்பது எங்கள் கருத்து என பேசியுள்ளார்.
பேச்சுக்கு நேபாளத்திலே எதிர்ப்பு
பாலேந்திர ஷாவின் பேச்சுக்கு நேபாள எதிர்க்கட்சி மற்றும் முன்னாள் தூதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"சில எல்லைப் பகுதிகளில் எல்லைக் கம்பங்கள் இல்லாததால், சில நேபாளியர்கள் இந்தியாவில் உள்ள நிலத்தையும், சில இந்தியர்கள் நேபாளத்தில் உள்ள நிலத்தையும் பயன்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் நேபாள அரசாங்கம் இந்தியப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கவில்லை. இந்தியாவும் இது குறித்து அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரதமர் எந்த ஆவணங்களின் அடிப்படையில் இப்படி பேசினார் என தெரியவில்லை" என்று இந்தியாவிற்கான முன்னாள் நேபாள தூதர்கள் இந்த கருத்தை மறுத்துள்ளனர்.
உத்தரகாண்டின் லிபுலேக் கணவாய் பகுதியை உரிமை கோருவதில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.

இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 6 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டிருந்த கைலாஷ் மானசரோவர் யாத்திரை சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட போது, லிபுலேக் கணவாய் வழியே செல்ல நேபாள அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தப் பாதையின் வழியாக யாத்திரை பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புதிய முன்னேற்றம் அல்ல, நேபாளம் முன்வைத்த ஒருதலைப்பட்சமான பிராந்திய உரிமைகோரல்களை இந்தியா நிராகரித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |