தெற்கு ஆசியாவிலேயே முதல் நாடு இது தான்..! அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட தன்பாலின திருமணம்
நேபாளத்தில் புதன்கிழமை முதல் முறையாக சம பாலின திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் முதல் பதிவு செய்யப்பட்ட திருமணம்
நேபாளத்தை சேர்ந்த தன்பாலின சேர்க்கையாளர் சுரேந்திர பாண்டே என்பவருக்கும், திருநங்கை மாயா குருங் என்பவருக்கும் இடையே நடைபெற்ற திருமணம் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல போராட்டங்களுக்கு மத்தியில் இந்த தன்பாலின திருமணம் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட தன்பாலின திருமணம் என்ற பெருமையை சுரேந்திர பாண்டே மற்றும் மாயா குருங் பெற்றுள்ளனர்.
சட்ட அங்கீகாரம் வழங்கிய நீதிமன்றம்
நேபாளத்தில் கடந்த 2007ம் ஆண்டே தன் பாலின திருமணங்களுக்கு அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் 2015ம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டத்திலும், தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து தன்பாலின திருமணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மாயா குருங், சுரேந்திர பாண்டே இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் தன் பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து புதன்கிழமை தெற்கு ஆசியாவின் அதிகாரப்பூர்வமான முதல் தன்பாலின திருமணமாக மாயா குருங், சுரேந்திர பாண்டே திருமணம் பதியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |