ஹமாஸ் படைகளை ஆதரிக்கும் ஸ்டார்மர்... இஸ்ரேல் பிரதமர் கடும் குற்றச்சாட்டு
பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் ஹமாஸ் படைகள் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று போராடி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் மண்டியிட வேண்டும்
படுகொலைகாரர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், சிறார்களைக் கொலை செய்பவர்கள் மற்றும் கடத்தல்காரர்களுடன் பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் கனேடிய தலைவர்கள் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தில் நடந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துப் பேசிய நெதன்யாகு, சர் கெய்ர் ஸ்டார்மர், இமானுவல் மேக்ரான் மற்றும் மார்க் கார்னி ஆகியோர் ஹமாஸின் படுகொலைப் படையிடம் இஸ்ரேல் மண்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றார்.
ஆனால், நெதன்யாகுவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் பதில் சொல்ல மறுத்துள்ளது. அத்துடன், வாஷிங்டன் தாக்குதல் தொடர்பில் ஸ்டார்மர் பதிவு செய்திருந்த கண்டனத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில், யூத எதிர்ப்பு என்பது நாம் ஒழிக்க வேண்டிய ஒரு தீமை என ஸ்டார்மர் பதிவு செய்திருந்தார். இதனிடையே, காஸா மீது இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்தன.
தீவிர நடவடிக்கைகள்
திங்களன்று, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தியதைக் கண்டித்ததுடன், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் மறுப்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த நாடுகள், இஸ்ரேல் தொடர்ந்து உலக நாடுகளின் கோரிக்கைகளை புறக்கணித்தால் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்தன.
இதனையடுத்தே, ஹமாஸ் ஆதரவு நிலை எடுத்துள்ளதாக இந்த நாடுகள் மீது நெதன்யாகு கொந்தளித்துள்ளார். முன்னதாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் திகிலூட்டுவதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஸ்டார்மர், காஸாவில் நடந்தேறும் நெருக்கடி தாங்க முடியாதது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |