நெதன்யாகு பேசத்தொடங்கியதும்... ஐ.நா அவையில் திடீரென்று நடந்த சம்பவம்
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசத்தொடங்கியதும், மொத்த உறுப்பினர்களும் வெளியேறிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கூச்சலிட்டு எதிர்ப்பு
காஸா போர் நீடிக்கும் என நெதன்யாகு அறிவித்ததும், உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிலர் கரவொலி எழுப்பி ஆதரித்துள்ளனர். ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கிய பணியை முழுமையாக முடிக்கப்படும் எனவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் கேட்கும் வகையில், காஸாவில் ஒலிபெருக்கிகள் மூலம் தனது உரை ஒலிபரப்பப்படுவதாக அவர் விளக்கினார். மட்டுமின்றி, காஸா மக்களின் அலைபேசிகளை இஸ்ரேல் உளவு அமைப்புகள் கட்டுப்படுத்துவதால், தமது உரை பாலஸ்தீன மக்களும் கேட்கும் வகையில் ஒலிபரப்பப்படுகிறது என்றார்.
பணயக்கைதிகளை இஸ்ரேல் கைவிடவில்லை என ஐ.நா மன்றத்தில் முழங்கிய நெதன்யாகு, இதுவரை தமது நிர்வாகம் அவர்களை மீட்க என்ன செய்தது என்பதை விளக்காமல் தவிர்த்தார். ஆனால், இஸ்ரேல் மக்கள் உடனிருப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
அத்துடன், ஆயுதங்களைக் கைவிட்டு, பணயக்கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸ் படைகளுக்கு வலியுறுத்திய நெதன்யாகு, பணயக்கைதிகளை விடுவித்தால், நீங்கள் உயிருடன் இருப்பீர்கள், மறுத்தால் இஸ்ரேல் உங்களை பழி வாங்கும் என்றும் நெதன்யாகு மிரட்டல் விடுத்தார்.
மேலும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலர் அழுத்தம் காரணமாக அவசர முடிவெடுக்கலாம், ஆனால் இஸ்ரேல் அப்படியான ஒரு சூழலுக்கு எப்போதும் தள்ளப்படாது என்றார்.
கடும் நெருக்கடி
மேலும், பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்த நாடுகளை கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, அவர்கள் எடுத்துள்ள முடிவு அவமானகரமானது என்றும் கூறினார். இது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்றும், யூதர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு எதிரான செயல் என்றும் நெதன்யாகு விளக்கமளித்தார்.
இதனிடையே, பாலஸ்தீன அரசாங்கம் அமையாமல் இருக்க மேற்குக்கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்திருந்த நெதன்யாகுவிற்கு கடும் நெருக்கடி அளிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்படியான திட்டத்தை தம்மால் ஏற்க முடியாது என்றும், ஒருபோதும் நடக்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட்டுடன் சேர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நெதன்யாகு போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |