காஸா மக்களை இந்த ஆபத்தான நாட்டிற்கு நாடுகடத்த திட்டமிடும் இஸ்ரேல்: நடவடிக்கைகள் தீவிரம்
காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான உலகளாவிய அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பாலஸ்தீனியர்களை வெளியேற்றி தெற்கு சூடானில் அவர்களை மீள்குடியேற்ற இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
பிரதமர் அளித்த வாக்குறுதி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தின் கீழ், இஸ்ரேல் நிர்வாகம் கிழக்கு சூடானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நடவடிக்கையானது காஸா பகுதியிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்கான இஸ்ரேலின் மிக மோசமான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் பின்னனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த வாக்குறுதியும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கடந்த 22 மாதங்களாக ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய மக்களை வெளியேற்றி, காஸா பகுதியை மொத்தமாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டம் இதுவென்றும் கூறுகின்றனர்.
நெதன்யாகுவின் காஸா இடமாற்றத் திட்டமானது தற்போது உலகளாவிய மனித உரிமைகள் அமைப்புகளிடம் கவலைகளை எழுப்பியுள்ளது, காஸா மக்கள் ஏற்கனவே போரினால், பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து அதே நெருக்கடியில் உள்ள இன்னொரு பகுதிக்கு வெளியேற்றப்படுவதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில் தற்போது உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கிரேட்டர் இஸ்ரேல்
இதற்கிடையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காஸா இடமாற்றத் திட்டம், உலகளாவிய மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து பெரும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
இது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை என்றும், பாலஸ்தீனியர்களை கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளின் கிரேட்டர் இஸ்ரேல் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இதைப் பார்க்கப்படுகிறது.
ஆனால், வெளியான தகவல்களை தெற்கு சுடான் முற்றிலுமாக மறுத்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் துணை வெளிவிவகார அமைச்சர் ஷரன் ஹாஸ்கெல், தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் செமாயா கும்பா ஆகியோரை சந்தித்த நிலையிலேயே, நெதன்யாகுவின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
முன்னதாக இந்த திட்டத்தை ஆதரித்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச அழுத்தங்களுக்கு பயந்து சமீபத்திய மாதங்களில் அதிலிருந்து பின்வாங்கியுள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |