மத்திய கிழக்கில் இறுகும் பதற்றம்... இஸ்ரேல் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் மோதல்
ஈரான் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணியில் இஸ்ரேல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலுக்கு காரணம் போர் நிறுத்த ஒப்பந்தம் முடங்கியது தொடர்பானது என குறிப்பிடுகின்றனர்.
பேச்சுவார்த்தைகள் முடங்கியதை அடுத்து காஸாவில் சிக்கியுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலி ஊடகங்களும், பிணைக் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாததன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவே வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தாகவே கூறப்படுகிறது. திங்களன்று நடந்த பாராளுமன்றக் குழுவிற்கான தனிப்பட்ட விளக்கம் ஒன்றில் அமைச்சர் Gallant குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில், வடக்கில் ஹிஸ்புல்லா மற்றும் காஸாவிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையில் இஸ்ரேல் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் காலன்ட் விவாதித்துள்ளார்.
தானும் ராணுவமும் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், காஸா மீதான முழுமையான வெற்றி என்பது முட்டாள்தனம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா மீதான முழுமையான வெற்றி என்பது பிரதமர் நெதன்யாகு அடிக்கடி கூறிவரும் சொற்றொடராகும். பாதுகாப்பு அமைச்சர் காலன்ட் பேசிய கருத்துகள் கசிந்துள்ளதை அடுத்து, பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சர் காலன்ட் சிக்கலில் ஆழ்த்தியதாக பிரதமர் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
அரசியல் ஆதாயத்திற்காகவே
மட்டுமின்றி, இஸ்ரேல் விரோத போக்கை அமைச்சர் காலன்ட் முன்னெடுப்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்ரேலின் ஒரே இலக்கு அது முழுமையான வெற்றி மட்டுமே என்றார்.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்களிடமும் பிணைக் கைதிகளின் குடும்பத்தினரிடமும் நெதன்யாகு பொய்யான தகவலை தெரிவித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது என்றார்.
நெதன்யாகுவுக்கு பிணைக் கைதிகள் தொடர்பில் கவலையும் இல்லை அக்கறையும் இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, தனது அரசியல் ஆதாயத்திற்காகவே நெதன்யாகு காஸா மீது போர் தொடுத்துள்ளார் என்றும், பிணைக் கைதிகளை மீட்க வேண்டும் அல்லது போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்றே ஹமாஸ் தலைவர்கள் மற்றும் சில போர் ஆய்வாளர்கள், விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதனிடையே இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் ஈரான் அல்லது ஹிஸ்புல்லா தாக்குதலை முன்னெடுக்கலாம் என்று அமெரிக்காவும் இஸ்ரேல் உளவு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |