கடும் அரசியல் நெருக்கடி... தோல்வி பயம்: ட்ரம்பை சந்திக்க புறப்பட்ட நெதன்யாகு
கடும் அரசியல் நெருக்கடி காரணமாக பிராந்திய எதிரிகளுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கக்கூடும் என்ற அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்க புறப்பட்டுள்ளார்.
பெரும் சவால்கள்
இஸ்ரேலின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மத்திய கிழக்கை மேலும் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. காஸாவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்திருந்தாலும்,

இஸ்ரேல் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் முடிவுக்கு வரவில்லை. இருப்பினும் முதல் கட்டத்திற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன;
இஸ்ரேலியப் படைகள் புதிய நிலைகளுக்குப் பின்வாங்கியுள்ளன, மேலும் ஹமாஸ் படைகள் உயிருடன் இருந்த அனைத்து பணயக்கைதிகளையும், இறந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் விடுவித்துள்ளது.
ஆனால், ஜனாதிபதி ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன. இந்த நிலையில், பெரும் ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளும் நெதன்யாகு, லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தை நெதன்யாகு மீறக் கூடும், அல்லது ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நெதன்யாகு திட்டம் தீட்டலாம்.

மட்டுமின்றி, தற்போதும் தாங்கள் கட்டுப்படுத்தும் காஸாவின் 53 சதவீதப் பகுதியிலிருந்து பின்வாங்குவதற்கோ அல்லது அந்தப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகள் தடையின்றிச் செல்வதற்கு அனுமதிப்பதற்கோ இஸ்ரேல் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
ஆட்சியை தக்கவைப்பது
மேலும், நெதன்யாகு காஸா போர்நிறுத்தத்தை சீர்குலைத்து, அமைதி செயல்முறையை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் விரக்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், நெதன்யாகு அமெரிக்காவில் ட்ரம்பை சந்திக்க இருக்கிறார். அடுத்த 10 மாதங்களுக்குள் நெதன்யாகு தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். பிரதமர் பதவியை இழக்க நேர்ந்தால், சிறை செல்ல நேரிடும் என்பதை நெதன்யாகு உறுதியாக நம்புவதால், பதவியை தக்கவைத்துக்கொள்ள அவர் திட்டமிட்டு வருகிறார்.
வெளியான கருத்துக்கணிப்புகளில், நெதன்யாகு கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. அக்டோபர் தாக்குதலை ஹமாஸ் படைகள் முன்னெடுத்தது நெதன்யாகு நிர்வாகத்தின் தோல்வி என்றே இஸ்ரேல் வாக்காளர்கள் நம்புகின்றனர்.

மேலும், இஸ்ரேலில் உள்ள பெரும்பாலான தீவிர பழமைவாத யூத ஆண்களுக்கு கட்டாய இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிப்பதை தொடர்வதற்கான நடவடிக்கைகளும் நெதன்யாகுவுக்கு எதிராக உள்ளது. அத்துடன் நெதன்யாகு குடும்பத்தை வேட்டையாடும் பல்வேறு ஊழல் வழக்குகளும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |