பல உயிர்களைக் காப்பாற்றினார்... இந்திய விமானிக்கு நன்றி சொன்ன நெதன்யாகு
Netanyahu praises stabbed Indian pilot: கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானியை நெதன்யாகு பாராட்டினார்.
சவுதி அரேபியாவில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்ட துபாய்-டெல் அவிவ் விமானத்தில் இருந்த 174 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
அபாரமான துணிச்சலுக்கு
குறித்த விமானி சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டிருந்தார் என்பதுடன், இந்த விவகாரம் பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அபாரமான துணிச்சலுக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நெதன்யாகு புதன்கிழமை மாலை தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த போதிலும், மச்சார் எதிர்த்துப் போராடி, காக்பிட் கதவைத் திறந்து, பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் தாக்குதல் நடத்தியவரை அடக்க உதவினார்; இதன் மூலம் நடுவானில் நிகழவிருந்த ஒரு பெரும் பேரழிவைத் தடுத்தார் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலியக் குடிமக்கள் மற்றும் பிற நாட்டவர்கள் உட்பட 174 பேரின் உயிரை அவர் காப்பாற்றினார் என்று கூறிய நெதன்யாகு, அந்த விமானி விரைவில் முழுமையாகக் குணமடைய வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.
விமானத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மச்சாரைக் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட விமானத்தின் துணை விமானி அடையாளம் காணப்படவில்லை, ஆனால் விமானம் சவுதி அரேபியாவில் தரையிறங்கிய பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக நெதன்யாகு கூறினார்.
இதனிடையே, ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தின் துணிச்சலான இந்திய விமானி ஸ்மித் மச்சார், வடமேற்கு சவுதி அரேபியாவில் தபூக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருவதாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
நேரிடையாக சென்று
புதன்கிழமை காலை துபாயிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 'ஃப்ளைதுபாய்' விமானம் FZ1073 அவசரநிலை எச்சரிக்கையை விடுத்தது; அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் உள்ளனர் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஃப்ளைதுபாய் நிறுவனத்தால் இயக்கப்படும் இன்னொரு விமானத்தில் பயணிகள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் நேரிடையாக சென்று நெதன்யாகு வரவேற்றுள்ளார்.
இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணி தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், இது மலிவான அரசியல் என்றே இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரான யாயிர் லாபிட் விமர்சித்துள்ளார்.