நெதன்யாகுவால் ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் ஆபத்தில்
லெபனானின் நிலை மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்து ஆகியவை தொடர்பான கருத்து வேறுபாடுகளால், ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகளில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியுள்ளன.
எங்களைக் கட்டுப்படுத்தாது
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரானுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்த மறுநாளே, தெற்கு லெபனானிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என்று இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைகளில் லெபனான் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேலும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவும் இன்னும் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த அமைதி ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா வரவேற்றிருந்த போதிலும், தேவைப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் லெபனானில் நிறுத்தபப்ட்டிருக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், லெபனானிலிருந்து வரும் தாக்குதல்களை முறியடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தைத் தங்கள் நாடு தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
நாங்கள் ஒரு இடைநிலை பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கியுள்ளோம். தேவைப்படும் வரை நாங்கள் அங்கேயே இருப்போம். இந்த விடயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் இதில் உண்மையிலேயே பிடிவாதமாக இருக்கிறேன், மேலும் நமது அமெரிக்க நண்பர்களும் இஸ்ரேலின் இந்த முடிவை மதித்தார்கள் என்று நான் நினைக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு உரிமை உண்டு
மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்திலிருந்தும், லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவது என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்றே அமெரிக்க அதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஒரு போர்நிறுத்தமாகும்; இது ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் அல்ல. அதாவது, ஈரான் ஹிஸ்புல்லாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறி, அவர்கள் இஸ்ரேலிய நிலைகள் அல்லது நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினால், தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் பதிலடி கொடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அந்த அமெரிக்க அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

ஆனால், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில், லெபனானின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
இதனிடையே, டொனால்ட் ட்ரம்புடன் ஒரு மோதம் போக்கை முன்னெடுக்க தாம் தயாரல்ல என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, ஈரான் மீது அமெரிக்காவுடன் இணைந்து போரைத் தொடங்கியதன் மூலம் அணு ஆயுத அழிவு எனும் ஆபத்திலிருந்து இஸ்ரேல் காப்பாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தெற்கு லெபனான் மட்டுமின்றி, சிரியா, காஸாவில் இருந்தும் இஸ்ரேல் படைகள் வெளியேறும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |