காஸா போரின் பின்னணி... ஹாரெட்ஸ் நாளேடு மீது வழக்குத் தொடர உள்ள நெதன்யாகு
Netanyahu to sue Haaretz over claims UAE warned him: ஐக்கிய அரபு அமீரகம் தன்னை எச்சரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெதன்யாகு ஹாரெட்ஸ் மீது வழக்குத் தொடர உள்ளார்.
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஹாரெட்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள தரவுகள் தொடர்பாக, அந்த நாளேடு மீது வழக்கு தொடரப்போவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
10 நாட்களுக்கு முன்பே
இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ள நெதன்யாகு, குறித்த செய்திகள் அனைத்தும் புனையப்பட்டது மற்றும் பொய்யானது என்றும், ஹாரெட்ஸ் மற்றும் அதன் ஆசிரியர்களான ஷ்லோமி எல்டார், ரூத் யாவல் மீதும் வழக்குத் தொடருமாறு தனது சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த சம்பவங்களுக்கு 10 நாட்களுக்கு முன்பே, ஹமாஸ் அமைப்பின் சாத்தியமான தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், நெதன்யாகுவை எச்சரித்திருந்தார்.
அன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் படைகள் குறைந்தது 1,195 பேரைக் கொன்றதுடன், சுமார் 251 பேரைச் சிறைபிடித்துச் சென்றது. கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பின்னர் இஸ்ரேல் அரசாங்கத்தால் திருத்தப்பட்டது.
அந்தத் தாக்குதல்கள் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலைக்கான போரைத் தூண்டின; இதில் குறைந்தது 73,669 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நெதன்யாகு மற்றும் அவரது மனைவிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கியிருந்த நிலையிலும், நெதன்யாகுவின் பதவி பறிக்கப்பட்டு அவர் சிறை செல்வார் என்ற கட்டத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
ஹாரெட்ஸ் வெளியிட்டிருந்த தகவலில், அமீரக ஜனாதிபதி நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்போதைய ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரிடமிருந்து வந்த அச்சுறுத்தல் குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், கைதிகள் பரிமாற்றப் பேச்சுவார்த்தைகள் முடங்கியதாலும், காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையாலும் கோபமடைந்த சின்வார், ஒரு இடைத்தரகர் மூலம் அந்த எச்சரிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தெரிவித்திருந்தார்.
நேதன்யாகு பின்தங்கியுள்ளார்
மேலும், ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஆயத்தம் செய்து வருவதாகவும், ஒரு நிலநடுக்கத்தை எதிர்பார்க்குமாறு இஸ்ரேலிடம் தெரிவிக்குமாறு தமக்குத் தொடர்பில் உள்ளவர்களிடம் சின்வார் கூறியதாகவும் ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
சின்வாரின் அந்த எச்சரிக்கை மிகப் பெரிய தாக்குதல் ஒன்றின் அறிகுறியாகவே அமீரக ஜனாதிபதியும் அவரது அதிகாரிகள் தரப்பும் புரிந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த உளவுத் தகவலை இஸ்ரேலின் 'ஷின் பெட்' (Shin Bet) அமைப்பிடம் அமீரகம் அளித்தது. ஆனால், ஷின் பெட் அமைப்பு அந்த அச்சுறுத்தலை நிராகரித்தது. இதன் பின்னரே, நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமீரகம் எச்சரித்துள்ளது.

ஆனால் நெதன்யாகும் அதை புறந்தள்ளியுள்ளார். அக்டோபரில் நடைபெறவுள்ள நெசெட் (Knesset) தேர்தலில் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகு கடுமையாகப் போராடி வரும் வேளையில், ஹாரெட்ஸ் இதழின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள நேதன்யாகு, கருத்துக்கணிப்புகளில் மிக மோசமாக பின்தங்கியுள்ளார்.
இந்த நிலையில், ஹாரெட்ஸ் இதழின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அது இடதுசாரிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் புதன்கிழமை அன்று நெதன்யாகு கூறினார்.
மட்டுமின்றி, அமீரக ஜனாதிபதியுடன் இந்த விவகாரத்தில் தாம் தொலைபேசியில் உரையாடியதில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |