மோடியின் நெதர்லாந்து பயணம் - சோழர் கால செப்புத் தகட்டை ஒப்படைக்கும் அரசு
மோடியின் நெதர்லாந்து பயணத்தில் சோழர் கால செப்புத் தகட்டை நெதர்லாந்து அரசு ஒப்படைக்க உள்ளது.
மோடியின் நெதர்லாந்து பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 5 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தை முடித்த அவர், நெதர்லாந்திற்கு சென்றடைந்துள்ளார்.
நெதர்லாந்து விமான நிலையத்தில், அந்நாட்டு ராணுவத் தலைவர் லுட்கர் ப்ரூம்மேலார், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் டாம் பெரென்ட்சன், நெதர்லாந்திற்கான இந்தியத் தூதர் குமார் துஹின் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இருநாட்டின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், பல முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாக உள்ளது.
அதைத்தொடர்ந்து, மன்னர் வில்லெம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில், இந்த பயணத்தின் பொது சோழர் கால செப்புத் தகட்டை இந்திய பிரதமர் மோடியிடம் நெதர்லாந்து ஒப்படைக்க உள்ளது.
ஆனைமங்கலம் செப்புத் தகடு
11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் என்பவை, 21 பெரிய தகடுகளும் 3 சிறிய தகடுகளும் கொண்டது.
இவை, சோழ அரச முத்திரையைக் கொண்ட ஒரு வட்ட வடிவ செப்பு வளையத்தால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் இது லைடன் தகடுகள் என்று அழைக்கப்படுகிறது.

இது சோழ பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985–1014) மற்றும் அவரது மகன் ராஜேந்திரனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை.
சோழர்களின் ஆட்சி உச்சக்கட்டத்தில் தென்னிந்தியாவையும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைத்திருந்த கடல்வழித் தொடர்புகள், சமயப் பன்மைத்துவம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்த அரிய பார்வையை இந்தக் கல்வெட்டுகள் வழங்குகின்றன என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ராஜராஜ சோழன், நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி விகாரைக்கு ஆனைமங்கலம் கிராமத்தை வழங்கியதை பதிவு செய்கிறது.
18 ஆம் நூற்றாண்டில் சோழமண்டல் கடற்கரையில் டச்சு காலனி ஆட்சியின் போது, அந்தச் செப்புத் தகடுகள் நெதர்லாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
சுமார் 3 நூற்றாண்டுகளாக இந்த தகடுகள் லைடன் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இல்லாமல், ஆய்வாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் லைடன் பல்கலைக்கழகத்துடன் தொடர்ச்சியான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம், அந்தத் தகடுகளைத் திரும்பப் பெறுவதற்காக இந்தியா நீண்ட காலமாக முயன்று வந்தது.
2022 ஆம் ஆண்டில் காலனித்துவ கால கலைப்பொருட்களுக்கான மீளளிப்புக் கொள்கையை நெதர்லாந்து இறுதி செய்த பின்னர், சுதந்திர காலனித்துவ சேகரிப்புக் குழு மற்றும் லைடன் பல்கலைக்கழக நூலகங்கள் நடத்திய விரிவான மூல ஆய்வு, அந்தக் கல்வெட்டுகளை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |