இடிபாடுகளில் இருந்து பணயக்கைதிகளின் சடலங்களை மீட்க முடியவில்லை: கைவிரித்த ஹமாஸ்
இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் தரைமட்டமாக்கபப்ட்டுள்ள கட்டிட இடிபாடுகளில் இருந்து, இறந்த இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
28 பேர்கள் வரையில்
ஜனாதிபதி ட்ரம்பின் புதிய சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக இஸ்ரேலிய பணயக்கைதிகளில் உயிருடன் இருக்கும் 20 பேர்களும், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் சடலங்களும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ட்ரம்ப் தெரிவிக்கையில், பணயக்கைதிகளில் 28 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம், அவர்களின் சடலங்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
ட்ரம்பின் சமாதான ஒப்பந்தம் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளுடன் மரணமடைந்தவர்களின் உடல்களையும் திருப்பி அனுப்ப ஹமாஸுக்கு உள்ளூர் நேரப்படி நாளை நண்பகல் வரை அவகாசம் உள்ளது.
ஆனால், சடலங்களை ஒப்படைக்க முடியாமல் போனால் இது அடுத்த கட்டங்களை சிக்கலாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மட்டுமின்றி இறந்தவர்களை அடக்கம் செய்ய விரும்பும் உறவினர்களின் வேதனையை அது அதிகரிக்க கூடும்.
இந்த நிலையில், ஹமாஸ் படைகளால் ஒப்படைக்க முடியாமல் போகும் சடலங்களை மீட்கும் பொருட்டு இஸ்ரேல், அமெரிக்கா, துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாக கூட்டறிக்கை
இதனிடையே ட்ரம்ப் தெரிவிக்கையில், இறந்தவர்கள் 28 பேர்களில் சிலரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது, இது மிக மோசமான துயரம் என்றார். நாளை பகல் ஜெருசலேம் செல்லவிருக்கும் ட்ரம்ப், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றுகிறார்.
அத்துடன், விடுவிக்கப்படும் பணயக்கைதிகள் சிலரையும் ட்ரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் எகிப்து செல்லும் ட்ரம்ப், அங்கே காஸாவின் எதிர்காலம் தொடர்பில் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான், துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா பிரதிநிதிகளுடன் விவாதிக்கிறார்.
இதனிடையே, நேற்று காஸா நகருக்கு சுமார் 50,000 பாலஸ்தீன மக்கள் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவின் நிர்வாகத்தை வெளிநாட்டு குழு ஒன்றிடம் ஒப்படைக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி ஆகிய அமைப்புகள் ஒன்றாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
காஸா மீதான எந்தவொரு நிர்வாகமும் முற்றிலும் பாலஸ்தீனத்தின் உள்நாட்டு விடயமாக இருக்க வேண்டும் என்றே அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |