Deltacron VS Stealth Omicron! எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை அறிந்துகொள்வோமா?
ஒரு பக்கம், உலகின் பார்வை முழுவதும் உக்ரைன் மீது இருக்க, மற்றொரு பக்கம் கொரோனா தொற்று பரவிக்கொண்டுதான் இருக்கிறது.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இம்மாதம் (மார்ச்) 14ஆம் திகதி மட்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 170,000க்கும் அதிகம்!
தற்போது உலகில் கொரோனா வேகமாக அதிகரிப்பதன் பின்னணியில் இரண்டு கொரோனா துணை மாறுபாடுகள் உள்ளன.
Deltacron மற்றும் Stealth Omicron என அழைக்கப்படும் அந்த கொரோனா வைரஸ்களின் துணை மாறுபாடுகள் குறித்து அறிந்துகொள்வோம்.
Deltacron என்பது என்ன?
Deltacron என்பது, டெல்டா வகை கொரோனாவைரஸ் மாறுபாடு, மற்றும் Omicron வகை கொரோனாவைரஸ் மாறுபாடு ஆகிய இரண்டு வகை கொரோனா வைரஸ்களின் குணங்களிலும் சிலவற்றைத் தன்னகத்தே கொண்ட புதிய துணை மாறுபாடாகும்.
இந்த Deltacron வகை கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
Stealth Omicron என்பது என்ன?
Stealth Omicron என்பது, Omicron கொரோனா வைரஸின் ஒரு துணை மாறுபாடாகும். BA.2 என அழைக்கப்படும் இந்த வைரஸ் பிரித்தானியாவில் கடந்த டிசம்பரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்களிலேயே அதிக வேகமாக பரவக்கூடியது Stealth Omicronதான் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரில் பாதி பேர் வரை இந்த Stealth Omicron வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், அது ஜேர்மனி, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டில் பிப்ரவரியில் அதிக அளவில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக கருதப்படுகிறது.
புதிய வைரஸ்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை?
ஒரு வைரஸ் அதிக அளவில் பரவுகிறது என்றாலே, அது அதிக அளவில் மோசமான தொற்றுக்களையும் அதிக அளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் எனலாம்.
குறிப்பாக, குறைவான நோயெதிர்ப்பு சக்தியும், குறைந்த அளவில் தடுப்பூசி பெற்றதுமான நாடுகளுக்கு அபாயம் அதிகம். Omicron மற்றும் Omicron Stealth வகை கொரோனா வைரஸ்கள்தான் கடந்த இரண்டு மாதங்களில் ஹொங்ஹொங்கில் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியதின் பின்னணியில் இருந்திருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அத்துடன், சீனாவில் அதிக அளவில் பரவிவரும் தொற்றுக்கும், தென்கொரியாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுக்கும் இந்த இரண்டு வைரஸ்களும்தான் காரணம் என்கிறார்கள் அவர்கள்.
பிரித்தானியாவிலோ, நிலைமை இன்னும் சிக்கலாக உள்ளது. கடந்த ஏழு நாட்களில் பிரித்தானியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் சற்றே அதிகரித்து வருகிறது.
இதற்கு புதிய கொரோனா மாறுபாடுகள்தான் காரணமா, கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் காரணமா அல்லது தடுப்பூசியின் செயல்திறன் குறைவது காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை!