கடும் பீதியில் சிக்கியுள்ள ஒரு நாடு... 80 கடந்த இறப்பு எண்ணிக்கை
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இடுரி மாகாணத்தில் எபோலா நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்காவின் உயர்மட்ட சுகாதார முகமை அறிவித்துள்ளது.
80 பேர்கள் மரணம்
மோங்வாலு மற்றும் ருவாம்பாரா ஆகிய தங்கச் சுரங்க நகரங்களில் அதிகமாக நோய் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 246 பேர்கள் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி 80 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து நோய் பரவல் ஒன்று உறுதி செய்யப்பட்டதை உகாண்டா அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மேலும், வியாழக்கிழமை மரணமடைந்த 59 வயது ஆண் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
எபோலா தொற்றானது முதன்முதலில் 1976-ல் தற்போதைய டி.ஆர். காங்கோ பகுதியில் கண்டறியப்பட்டது, மேலும் இது வௌவால்கள் மூலம் பரவியதாகக் கருதப்படுகிறது.
மேலும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் உயிர்கொல்லும் இந்த கொடிய வைரஸ் தொற்று 17வது முறையாக பரவி வருகிறது. இது உடல் திரவங்களுடனான நேரடித் தொடர்பு மற்றும் தோலில் ஏற்படும் காயங்கள் மூலம் பரவி, கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்துகிறது.
தொடக்க அறிகுறிகளாக காய்ச்சல், தசை வலி, சோர்வு, தலைவலி மற்றும் தொண்டை வலி ஆகியவை காணப்படும். அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு, தோலில் தடிப்பு மற்றும் இரத்தப்போக்கு ஏற்படும்.

எபோலா தொற்றைக் குணப்படுத்த இதுவரை உறுதியான எந்த மருந்தும் இல்லை என்றே உலக சுகாதார முகமை குறிப்பிட்டுள்ளது. நோய் உறுதி செய்யப்பட்ட ஒருவர் உயிர் தப்ப சராசரியாக 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது.
பரவுவதற்கான அதிக ஆபத்து
தற்போது மரணமடைந்துள்ள 80 பேர்களில் நால்வருக்கு எபோலா பாதிப்பு இருப்பது ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, இடுரியின் மாகாணத் தலைநகரான புனியாவிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே சந்தேகிக்கப்படுகின்றன, ஆய்வக உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது.
மட்டுமின்றி, ருவாம்பாரா மற்றும் புனியாவின் நகர்ப்புற அமைப்புகள் மற்றும் மோங்வாலுவில் நடைபெறும் சுரங்க நடவடிக்கைகள் காரணமாக, மேலும் பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவே ஆப்பிரிக்காவின் சுகாதார முகமை கவலை தெரிவித்துள்ளது.

இடுரி பிராந்தியத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் டசின் கணக்கான ஆயுதக் குழுக்களை ஒடுக்கும் முயற்சியாக, சிவில் நிர்வாகம் ஒரு இராணுவத் தளபதியால் மாற்றீடு செய்யப்பட்டதிலிருந்து, 2021-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளில், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸால் சுமார் 15,000 பேர் மரணமடைந்துள்ளனர். காங்கோ ஜனநாயகக் குடியரசின் மிகவும் உயிர்ப்பலியை ஏற்படுத்திய நோய் பரவல் 2018 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தது; இக்காலகட்டத்தில் ஏறத்தாழ 2,300 பேர் மரணமடைந்தனர்.
கடந்த ஆண்டு, மத்திய கசாய் மாகாணத்தின் கிராமப் பகுதியான புலாபேவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கு 45 பேர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |