பிறப்பு சான்றிதழ் முதல் கலர் கோடிங் வரை.., இந்தியாவில் மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் விதிகள்
இந்தியாவில் புதியதாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் திருத்தம் செய்யப்பட்ட புதிய விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் விதிகள் மாற்றம் (New Passport Rules 2025)
சமீபத்தில் பாஸ்போர்ட் விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இதனால், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த பாஸ்போர்ட் விதிகளை திருத்தம் செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது, விண்ணப்பதாரர்களுக்கு தடையற்ற மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்கும்.
பிறப்புச் சான்றிதழ் (birth certificate)
ஒக்டோபர் 1, 2023 அல்லது அதற்கு அடுத்து பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே பிறந்த திகதிக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்படும். வேறு எந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
புதிய விதிமுறைகளின் கீழ், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர், நகராட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே பிறந்த திகதிக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதேபோல, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969-ன் கீழ் அதிகாரம் பெற்ற வேறு எந்த அதிகார அமைப்பினாலும் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதில், ஒக்டோபர் 1, 2023-க்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு இந்த புதிய விதிகள் பொருந்தாது.
அவர்கள், பிறப்புச் சான்றிதழ், இடமாற்றம் அல்லது பள்ளி விடுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், விண்ணப்பதாரரின் சேவைப் பதிவின் நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
குடியிருப்பு முகவரி (Residential address)
பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் விண்ணப்பதாரரின் குடியிருப்பு முகவரி அச்சிடப்படுவது தான் தற்போது வரை நடைமுறையில் இருக்கிறது இனிமேல் பாஸ்போர்ட்டில் ஒரு பார்கோடு அச்சிடப்படும்.
இதனை அதிகாரிகள் ஸ்கேன் செய்வதன் மூலம் குடியிருப்பு முகவரியை தெரிந்து கொள்ளலாம்.
கலர் கோடிங் சிஸ்டம் (Colour-coding system)
குடிமக்களை அடையாளம் காண்பதற்கு கலர் கோடிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தூதர்களுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற பாஸ்போர்ட்டும், சாதாரண குடிமக்களுக்கு தொடர்ந்து நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படும்.
பெற்றோரின் பெயர் நீக்கம் (Removing parents' names)
இனி பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் பெற்றோரின் பெயர் அச்சிடப்படாது. தனிப்பட்ட தகவல்கள் தேவையற்ற முறையில் பரவும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றமானது ஒற்றைப் பெற்றோர் அல்லது பிரிந்த குடும்பங்களைச் சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு உதவியாக இருக்கும்.
பாஸ்போர்ட் சேவா கேந்திரா (Passport Seva Kendras)
பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும்.
இந்த மையத்தின் எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் 442-லிருந்து 600-ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |