தடுப்பூசி சிக்கல்களுக்கு இடையில் ஜோ பைடன் கொடுத்த புதிய வாக்குறுதி!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மே மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும் என்று ஜோ பைடென் முன்னர் கணித்திருந்தார், ஆனால் வெள்ளை மாளிகை சமீபத்தில் அவரது நம்பிக்கையை குறைத்துவிட்டது.
போதுமான தடுப்பூசிகள் கிடைப்பது மற்றும் அவற்றை வழங்குவதற்கான செயல்திறன் ஆகிய இரண்டிலும் சிரமங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செவ்வாயன்று அனைத்து அமெரிக்கர்களுக்கும் எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேட்கப்பட்டதற்கு, "இந்த ஆண்டு ஜூலை இறுதிக்குள்" என பைடன் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய பைடன் "ஜூலை இறுதிக்குள் எங்களிடம் 600 மில்லியன் டோஸ்கள் இருக்கும், இது ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானது" என்றார்.
மேலும், குழந்தைகளை விரைவாக பள்ளிகளுக்குத் திரும்ப விரும்புவதாகவும், அதற்காக ஆசிரியர்களுக்கு விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றார்.
டவுன்ஹால் அமர்வில் அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்கு வரும் என்று கேட்டதற்கு, பைடன் "இந்த கிறிஸ்துமஸுக்குள் நாம் மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் இருப்போம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.