அந்த ஒரு முடிவு... இஸ்ரேல் ஏவுகணையில் இருந்து தப்பிய ஈரானின் புதிய உயர் தலைவர்
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமெனி தோட்டத்தில் உலாவுவதற்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல எடுத்த அந்த எதிர்பாராத முடிவு அவரை மரணத்தில் இருந்து தப்பிக்க வைத்துள்ளது.
அவர் எடுத்த ஒரு முடிவு
கசிந்த ஒடியோ ஒன்றில் குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று அலி காமெனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில், ஈரானின் புதிய உயர் தலைவரும் குறிவைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், திடீரென்று அவர் எடுத்த ஒரு முடிவு அவரை மரணத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் நெறிமுறைத் துறைத் தலைவர் Mazaher Hosseini என்பவரே பிப்ரவரி 28 அன்று என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
மூத்த மத குருக்கள் மற்றும் IRGC தளபதிகளுக்கு பகிர்ந்துள்ள தகவலில், மொஜ்தபா காலில் காயம்பட்டுள்ளதாக ஹொசைனி கூறியுள்ளார். இதற்கிடையில், அவரது மனைவியும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் அவரது மைத்துனரின் தலை துண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஜ்தபா தோட்டத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்ப வேண்டும் என்பதே கடவுளின் சித்தமாக இருந்தது என ஹொசைனி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியபோது, அவர் வெளியே தோட்டத்தில் இருந்து மாடிக்குச் சென்று கொண்டிருந்தார். தாக்குதலில் அவரது மனைவி ஹதாத், சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தார்.

திட்டமிட்ட நாடகம்
காமெனியின் இராணுவப் பணியகத் தலைவர் முகமது ஷிராஸியின் உடல் வெடித்துச் சிதறியதாகவும் ஹொசைனி தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் தனது தந்தை வசிக்கும் அதே குடியிருப்பு வளாகத்திலேயே மொஜ்தபா காமெனியும் வசித்து வந்தார்.
பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில், அலி காமெனி மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்காகக் கூடியிருந்தபோது, அந்த வளாகத்தின் மீது ஏவுகணைகள் தாக்கியன.

மொஜ்தபா காமெனி காலில் காயங்களுடன் தப்பியதாகவே ஹொசைனி குறிப்பிட்டுள்ளார். மொஜ்தபா காமெனியின் மேல் தளத்திலிருந்த வீடு தாக்கப்பட்டது; அத்துடன், அவருக்குக் கீழே அமைந்திருந்த, அவருடைய மைத்துனருக்குச் சொந்தமான குடியிருப்பு மற்றும் அவருடைய சகோதரரின் வீடும் தாக்கப்பட்டன.
ஆனால், ஹொசைனியின் இந்த ஒடியோ தகவல் திட்டமிட்ட நாடகம் என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. மொஜ்தபா உயிர் தப்பியுள்ளார் என்பதை மக்களுக்கு விளக்கவே இப்படியான நாடகம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
56 வயதான மொஜ்தபா காமெனியின் நிலை தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளிவரும் நிலையிலேயே ஹொசைனியின் இந்த ஒடியோ கசிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |