சுங்கச்சாவடிகளில் இவர்களுக்கெல்லாம் 2 மடங்கு கட்டணம் - நவம்பர் 15 முதல் அமுல்
சுங்கச்சாவடி கட்டணத்தில் நவம்பர் 15 முதல் புதிய விதி அமுலுக்கு வருகிறது.
சுங்கச்சாவடி கட்டணம்
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக சுங்கக்கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் ஏற்படும் நேர விரயம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டு Fastag நடைமுறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டது.
இருந்தாலும், இன்னும் பலர் Fastag பெறாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு Fastag இல்லாமல், சுங்கச்சாவடிகளை கடப்பவர்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நவம்பர் 15 முதல் அமுல்
இந்த விதியில் தற்போது மத்திய அரசு புதிய திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இனி Fastag இல்லாமல் ரொக்கமாக பணம் செலுத்துபவர்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேவேளையில், Fastag இல்லாமல், UPI மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு 1.25 மடங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, Fastag பயனர் ரூ.100 கட்டணம் செலுத்தினால், Fastag இல்லாமல் UPI மூலம் கட்டணம் செலுத்துபவர் ரூ.125 ஆகவும், ரொக்கமாக கட்டணம் செலுத்துபவர் ரூ.200 ஆகவும் செலுத்த வேண்டும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதையும், சுங்கச்சாவடிகளில் பணப் பயன்பாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த விதி நவம்பர் 15 முதல் அமுலுக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |