வாடகை குடியிருப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய முக்கிய நகர நிர்வாகம்: 10 ஆண்டுகளில் முதன்முறை
அமெரிக்காவின் நியூயார்க் நகர நிர்வாகம் 10 ஆண்டுகளில் முதன்முறையாக குடியிருப்புகளின் வாடகை கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
இதனால் ஒவ்வொரு குடியிருப்பாளர்களும் சுமார் 5% வரையில் இனி அதிக வாடகை செலுத்த நேரிடும் என தெரிய வந்துள்ளது.
நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் வாடகை-நிலைப்படுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தற்போது மிகப்பெரிய வாடகை அதிகரிப்பை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
நீண்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக நகர நிர்வாகம் ஒரு ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு குத்தகைகளுக்கான வாடகை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் குடியிருப்புகளை குத்தகைக்கு எடுத்து குடியிருக்கும் வாடகை குடியிருப்பாளர்கள் இனி கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் 5-ல் நால்வர் இந்த வாடலை உயர்வுக்கு ஆதரவளித்துள்ளனர். இதனால் வாடகை-நிலைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளில் ஓராண்டு குத்தகைக்கு 3.25% கட்டண உயர்வும் இரண்டு ஆண்டு குத்தகைக்கு 5% கட்டண உயர்வும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாடகை தொடர்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர், இருப்பினும் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்களுடன், எலிகள், கரப்பான் பூச்சிகள், கட்டுமான கசிவுகள், எரிவாயு பற்றாக்குறை, சுடுநீர் இல்லாமை ஆகிய அனைத்துடனும் நாளும் போராடுகிறோம், ஆனால் நீங்கள் அவர்களுக்கு அதிக பணம் கொடுக்க கட்டாயப்படுத்துகிறீர்கள் என பொதுமக்கள் காட்டமாக பதிலளித்துள்ளனர்.
புதிய வாடகை உயர்வானது எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கி அமுலுக்கு கொண்டுவரப்படும். இதனிடையே, மன்ஹாட்டன் பகுதியில் வாடகை-நிலைப்படுத்தப்பட்ட குடியிருப்பு ஒன்றின் மாத வாடகை 4,000 டொலர் என கூறப்படுகிறது.
ஓராண்டுக்கு முன்பு இருந்த கட்டணத்தைவிட சுமார் 40% அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வாடகை உயர்வு குறித்த வாரியத்தின் முடிவு ஏற்கனவே கடினமான நேரத்தில் தத்தளிக்கும் வாடகைதாரர்களுக்கு சுமையாக இருக்கும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.