உயிர் உறையும் குளிர்... உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்
வெப்பநிலை -14 டிகிரிக்கு கீழே குறைந்த நிலையில் பேருந்துக்காக காத்திருந்த நியூயார்க் கல்லூரி மாணவர் ஒருவர் உடல் உறைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கின் கிழக்கு கிரீன்புஷ் பகுதியை சேர்ந்தவர் Tyler Lopresti-Castro. இவரையே வியாழக்கிழமை காலையில் சுமார் 6.50 மணியளவில் பனியில் உடல் உறைந்த நிலையில் இரு போக்குவரத்து ஊழியர்கள் மீட்டுள்ளனர்.
பனிக்காலத்தில் பயன்படுத்த வேண்டிய உடைகள் ஏதும் அவர் அணிந்திருக்கவில்லை எனவும், வெப்பநிலை -14 டிகிரிக்கு கீழே குறைந்த நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தங்களால் இயன்ற முயற்சிகள் மேற்கொண்டும், அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும், 20 வயதேயான அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
மேலும், அவரது அடையாள அட்டையினூடாகவே அவர் கல்லூரி மாணவர் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே, சுமார் 3 மைல்கள் தொலைவில் உள்ள தமது இல்லத்திற்கு நடந்தே சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பு கமெராவில் சம்பவத்தன்று நள்ளிரவு குறித்த இளைஞர் சக மாணவர்கள் சிலருடன் காணப்படுவதாகவும், அதன் பின்னர் மாயமான அந்த இளைஞர் பின்னர் சுமார் 2.15 மணியளவில் பேருந்து நிலையத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள மரங்கள் அடர்ந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவது கமெராவில் பதிவாகியுள்ளதை பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், இளைஞரின் மரணத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் நடந்துள்ளதாக எந்த அடையாளமும் இல்லை என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.