கனடா போன்று நியூசிலாந்திலும்... சுற்றிவளைத்த பொலிசாரால் பதற்றம்
தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக நியூசிலாந்து நாடாளுமன்ற வளாகம் அருகே திரண்ட லொறி சாரதிகளுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
தடுப்பூசி மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மூன்றாவது நாளாக நியூசிலாந்து நாடாளுமன்ற வளாகம் அருகே நூற்றுக்கணக்கான லொறி சாரதிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வெலிங்கடன் பொலிசார் அதிரடியாக களத்தில் இறங்கியதுடன், டசின் கணக்கான சாரதிகளை கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தை மூடும் அரிய நடவடிக்கையை சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட் முன்னெடுத்ததை அடுத்து சாரதிகளை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற பொலிஸ் தரப்பு உத்தவு பிறப்பித்துள்ளதுடன், அவகாசம் அளித்து காத்திருந்ததாகவும், அதன் பின்னரே கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சுமார் 120 சாரதிகளை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது அத்துமீறல் அல்லது தடங்கல் செய்ததாக கூறி வழக்கும் பதிந்துள்ளதாக பொலிஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் 1,000கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாகனங்களில் நாடாளுமன்ற வளாகத்தினருகே திரண்டுள்ளனர்.
கனடாவில் இரண்டு வாரத்திற்கும் மேலாக தொடரும் சாரதிகளின் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நியூசிலாந்து சாரதிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டுள்ளனர். இதனால் சில தெருக்கள் மூடப்பட்டன. வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது.
மட்டுமின்றி, தேசிய நூலகம், தேநீர் விடுதிகள் பல, மதுபான விடுதிகள் மூடப்பட்டு, அப்பகுதி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
பொதுவாக நியூசிலாந்து நாடாளுமன்ற வளாகமானது சிறு சிறு குழுக்களால் எப்போதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுண்டு.
ஆனால் இரவு பகல் அங்கேயே தங்கியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பது புதிதாகவே பார்க்கப்படுகிறது.