இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றிய நியூசிலாந்து நாடாளுமன்றம்
New Zealand parliament passes India trade deal: நியூசிலாந்து நாடாளுமன்றம் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.

இதன் கீழ், நியூசிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்தின் மீதான சுங்கவரிகள் நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும்.
எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் ஆதரவுடன், இந்தச் சட்டம் 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் அமுலுக்கு வரும் நாளிலிருந்து, இதன் கீழ் வரும் அனைத்துப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை வரி விலக்கு பெறும்.
ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் உடனடியானவை மற்றும் கணிசமானவை என நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்ளே ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த உயர்தரமான ஒப்பந்தம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும், இதன்மூலம் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தக் காலக்கட்டத்தில் நிறைவு செய்வோம் என்ற நமது வாக்குறுதி நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து இந்தியப் பொருட்களும் நியூசிலாந்திற்கு வரியின்றி கொண்டு செல்லப்படும். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டொலர் முதலீடு செய்யவும் வெலிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது.
இரு நாடுகளும் முதலில் ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜூன் 2026-ல் முடிவடைந்த ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 3.99 பில்லியன் நியூசிலாந்து டொலராக (2.29 பில்லியன் அமெரிக்க டொலர்) இருந்தது; இதில் நியூசிலாந்தின் சரக்கு மற்றும் சேவைகளுக்கான ஒன்பதாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா திகழ்ந்தது.
இரு நாடுகளும் தங்கள் தரப்பிலான ஒப்புதல் நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு, அந்த வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.