ஆசிய நாடொன்றில் பல மாதங்களாக சிறைவைக்கப்பட்ட வெளிநாட்டுப் பணயக்கைதி விடுவிப்பு
இந்தோனேசியாவில் தனிநாடு கோரும் கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டவர் 19 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட 19 மாதங்களுக்கு பிறகு
கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி நியூசிலாந்து நாட்டவரான விமானி Phillip Mehrtens கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேற்கு பப்புவா விடுதலைப் படைகள் இந்தோனேசியாவில் இருந்து தனிநாடு கோரி போராடி வருகின்றனர்.
சம்பவத்தன்று இந்தோனேசியாவின் புறநகர் மாவட்டமான Nduga பகுதியில் அமையும் ஒரு சுகாதார மையத்தின் கட்டுமான ஊழியர்கள் 15 பேர்களை அழைத்துவர Phillip Mehrtens விமானத்துடன் புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே கிளர்ச்சியாளர்களால் அவர் சிறைபிடிக்கப்பட்டார். தற்போது நீண்ட 19 மாதங்களுக்கு பிறகு அவர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு தற்போது மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Phillip Mehrtens விடுவிக்கப்பட்டுள்ள தகவலை நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸும் உறுதி செய்துள்ளார்.
இந்தோனேசிய அரசாங்கத்துடன் தனிநாடு கோரிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தையை துவங்கும் பொருட்டே மேற்கு பப்புவா கிளர்ச்சியாளர்கள் Phillip Mehrtens-ஐ கடத்தியுள்ளனர்.
இந்தோனேசியாவின் ஒருபகுதியாக
ஆனால் அவருடன் இருந்த 15 கட்டுமான ஊழியர்களும் பப்புவா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், அன்றே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்த பப்புவா கிளர்ச்சியாளர்கள், பேச்சுவார்த்தையை துவங்க கோரிக்கை வைத்தனர்.
மட்டுமின்றி, தங்களுக்கு ஆதரவாக வேறு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மட்டுமின்றி, 2 மாதங்களில் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை எனில் பணயக்கைதியை கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
1969ல் விவாதத்துக்குரிய வாக்கெடுப்பின் முடிவில் இந்தோனேசியாவின் ஒருபகுதியாக பப்புவா இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து கிளர்ச்சி தொடர்ந்து வருகிறது.
மட்டுமின்றி, பூர்வகுடி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்களும் மூண்டுள்ளது. சமீப ஆண்டுகளில் பப்புவா கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களை வசப்படுத்தியுள்ளதை அடுத்து, மோதலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |