திருமணம் முடிந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட புதுமண தம்பதி: மணமகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
Newly Wed American Groom Killed in Helicopter crash: அமெரிக்காவின் திருமண முடிந்த மகிழ்ச்சியில் ஹெலிகாப்டரில் புறப்பட்ட புதுமண தம்பதி விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய புதுமண தம்பதி
இந்திய வம்சாவளி இளைஞர் டேவ் ஃபிஜி(25) மற்றும் ஜென்சி ஆகிய இருவருக்கும் அமெரிக்காவின் அட்லாண்டா அருகே டாட்சன்வில் பகுதியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்ச்சிகள் முடிந்த கையோடு தம்பதியை சிறப்பாக வழியனுப்பி வைக்கும் விதமாக ஹெலிகாப்டர் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இரவு நேரத்தில் பலத்த மழை மற்றும் மூடுபனி இருந்ததால் வணிக ரீதியான விமானியாக பணியாற்றி வந்த மணமகன் டேவ் ஃபிஜி பயணத்தை கைவிட திட்டமிட்டார்.
ஆனால் ஹெலிகாப்டர் விமானி பயணத்தை தொடர முடிவு செய்துள்ளார். இறுதியில் துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து காட்டுப்பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழந்த மணமகன்
இந்த சம்பவத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய நிகில் நர்குண்டகர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணமகள் ஜென்சி கிட்டத்தட்ட 6 மணி நேரம் தன்னுடைய கணவர் டேவ்வின் உடலுக்கு அடியில் நசுங்கி உயிருக்காக போராடி வந்தார்.

இறுதியில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் மணமகள் ஜென்சியை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
ஹெலிகாப்டர் விமானியின் அலட்சியமே விபத்துக்கான காரணம் என்று குற்றம் சாட்டி சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மற்றும் திருமண மண்டபம் மீது மணமகள் ஜென்சி நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.